செய்திகள்

கருணாநிதியின் எல்லா கனவுகளையும் சாதித்து காட்டுவேன் - மு.க.ஸ்டாலின் சபதம்

Published On 2018-08-10 20:45 GMT   |   Update On 2018-08-10 20:45 GMT
தி.மு.க.வின் லட்சோப லட்சம் தொண்டர்கள் துணையோடு கருணாநிதியின் எல்லா கனவுகளையும் சாதித்து காட்டுவேன் என்று மு.க.ஸ்டாலின் சபதம் மேற்கொண்டுள்ளார். #DMK #MKStalin #Karunanidhi
சென்னை:

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு கடிதம் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்று ஆகஸ்டு 10 (அதாவது நேற்று) தலைவர் கருணாநிதியின் சாதனை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கும் நாள்களில் ஒன்று. அவரது முதல் பிள்ளையான ‘முரசொலி’ இதழ் பிறந்த நாள். தி.மு.க.வுக்கு வாளும், கேடயமுமாய் ‘முரசொலி’யை வார்ப்பித்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் தலைவர் கருணாநிதி. தந்தையை இழந்து நான் நிற்பதைப் போலவே ‘முரசொலி’ என்ற மூத்த மகனும் தந்தையை இழந்து நிற்கிறான். காகிதக் கண்ணீர் வடித்து நிற்கிறது ‘முரசொலி’.

இப்படி ஒரு தலைவன் எந்த இயக்கத்துக்கும் வாய்த்தது இல்லை என்று நாம் பெருமையால் திளைக்கும் அளவுக்கு வாழ்ந்தவர் அவர். இப்படிப்பட்ட தொண்டர்கள் எந்த தலைவருக்கும் கிடைத்தது இல்லை என்கிற அளவுக்கு செயல்பட்டவர்கள் நீங்கள். தலைவன் - தொண்டன் என்ற பாகுபாடுகூட இல்லாமல் தந்தை - தனயனாய்த் தான் அனைவரையும் அன்பால் அரவணைத்தார். அதனால்தான், ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே!’ என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டதும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்களாய் நாம் மயங்கி நின்றோம்.

“என் பொதுவாழ்வுப் பயணத்தில் இடர், துடர், இன்பம், துன்பம், எதிர்ப்பு, ஆதரவு, ஏச்சு, பேச்சு, இழிவு, பழி என எத்தனையோ விதவிதமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது என்னை ஆளாக்கிய பெரியாரையும், அரவணைத்து வழிநடத்திய அண்ணாவையும் நினைத்துக்கொண்டு லட்சியத்தில் இம்மியளவும் சறுக்கல் இல்லாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறேன்” என்று தலைவர் கருணாநிதி எழுதினார். நமது பொது வாழ்வுப் பயணத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய 3 மாபெரும் சக்திகள் நம்மை வழிநடத்தும்.

உங்களில் ஒருவனான நான், ஏதோ ஒன்றை அல்ல, எல்லாவற்றையும் இழந்த மனநிலையில் இருக்கிறேன். அவர் கருவால் உருவானவன் நான். அவரது கதகதப்பில் தவழ்ந்தவன். அவரால் நடை பழகியவன். உடை அணிவிக்கப்பட்டவன். அவரால் அழைத்துச் செல்லப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டவன். போராளியும், சோவியத் கட்டமைப்பை உருவாக்கியவருமான ஸ்டாலினின் பெயரை எனக்கு சூட்டியவர் அவர். அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டு, தி.மு.க.வின் ஆட்சி கலைக்கப்பட்டபோது காவல்துறை என்னை கைது செய்ய வந்தபோது, கம்பீரத்தோடு என்னை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்த நெஞ்சுரத்தைப் பார்த்து வளர்ந்தவன் நான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் என்னை வார்ப்பித்தார். வளர்த்தெடுத்தார். “ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு” என்று மும்முறை அவர் சொன்னதுதான் எனக்கு கிடைத்த மாபெரும் பாராட்டுப் பட்டயம்.


‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்ற அந்த 3 வார்த்தைகள்தான் எனக்கு அவர் விட்டுச் சென்ற மந்திரச் சொற்கள். 3 வேளையும் என்னை இயக்கப்போகும் சாவி அதுதான். அந்த உழைப்பு, திராவிட இயக்கத்தின் லட்சியங்களை வென்றுகாட்டும். அந்த உழைப்பு, தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் பெற்றுத்தரும். அந்த உழைப்பு, தலைவர் கருணாநிதியின் எல்லாக் கனவுகளையும் நிறைவேற்றும். தி.மு.க.வின் லட்சோப லட்சம் தொண்டர்கள் துணையோடு இதை சாதித்துக் காட்டுவேன் என்று சபதம் ஏற்கிறேன்.

‘ஏடு’தான் கட்சியை வளர்க்கும். ‘கட்சி’தான் ஏட்டையும் வளர்க்கும். பல நூறு இதழ்களால் வளர்க்கப்பட்டது திராவிட இயக்கம். இதனை தி.மு.க. தொண்டர்கள் மறந்து விடக்கூடாது. கட்சி தொண்டர்களுக்கு ‘முரசொலி’ வாசிப்பது மூச்சு விடுவது போன்று இயல்பானதாக மாறினால்தான் தலைவர் கருணாநிதியின் மூத்த பிள்ளை ஆரோக்கியமாக இருப்பான். ‘முரசொலி’யை வளர்ப்பது என்பது தலைவர் கருணாநிதியின் மூத்த பிள்ளையை வளர்ப்பது போல் என்று நினைத்து வளர்த்தெடுக்க வேண்டும். முரசொலி, தலைவர் கருணாநிதியின் மூத்த பிள்ளை என்றால் எனக்கு ‘மூத்த அண்ணன்’.

தலைவர் கருணாநிதி என்ன நினைக்கிறார் என்று நேரில் பார்த்து தெரிந்து கொள்வதைவிட முரசொலியைப் பார்த்து தெரிந்துகொள்வதே அதிகம். அவர் இல்லாத சூழ்நிலையில் நித்தமும் வெளிவரும் முரசொலியைக் காலையில் பார்க்கும் போதும் கருணாநிதியின் முகம்தான் நினைவுக்கு வரும். கருணாநிதி நம்மோடு இருக்கிறார், எங்கும் போய்விடவில்லை என்பதை நித்தம் உணர்த்தும் ‘முரசொலி’யை வாழ்த்துகிறேன். வாழ்த்துங்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #Karunanidhi
Tags:    

Similar News