செய்திகள்

மாங்காடு அருகே வாடகை வீடு கேட்பதுபோல் நடித்து கொள்ளையடித்த பெண் கைது

Published On 2018-08-01 09:10 GMT   |   Update On 2018-08-01 09:10 GMT
மாங்காடு அருகே வாடகை வீடு கேட்பதுபோல் நடித்து கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். #arrestcase

பூந்தமல்லி:

மாங்காடு அடுத்த மதனந்தபுரம் முத்துமாரியம்மன் நகரை சேர்ந்தவர் நிர்மலா (56). சொந்த வீட்டில் வசித்து வரும் இவர் தனது வீட்டின் மாடி பகுதியை வாடகைக்கு விடுவதாக அறிவித்து இருந்தார். இதையடுத்து கடந்த மாதம் 18-ந்தேதி ஒரு தம்பதியினர் நிர்மலாவை சந்தித்து மாடிவீட்டில் வாடகைக்கு வர விரும்புவதாக கூறினார்கள்.

இதை உண்மை என்று நம்பிய நிர்மலா, அவர்களிடம் வாடகை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவரும் குடிக்க தண்ணீர் கேட்டனர்.

தண்ணீர் எடுப்பதற்காக நிர்மலா வீட்டின் உள்ளே சென்றார். அப்போது அந்த தம்பதியினர் நிர்மலா அணிந்திருந்த நகைகளை அறுத்துக் கொண்டு ஓட முயற்சி செய்தனர். உடனே நிர்மலா கூச்சலிட்டார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆண் சிக்கிக்கொண்டார். பெண் தப்பிவிட்டார்.

நகையை கொள்ளையடிக்க முயற்சி செய்து பிடிபட்ட ஆண் பெயர் தட்சிணாமூர்த்தி. அவரை மாங்காடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் என்பதும் அவருடன் வந்த பெண் தட்சிணாமூர்த்தி வீட்டில் வேலை செய்பவர் என்றும், அவருடைய பெயர் அமுதா (36) என்றும் தெரியவந்தது.

ஏற்கனவே இவர்கள் தம்பதிபோல் நடித்து பல வீடுகளில் கொள்ளை அடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் அமுதாவை மாங்காடு போலீசார் நேற்று கைது செய்தனர். அப்போது தட்சிணாமூர்த்தியுடன் சேர்ந்து பல வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அமுதா மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி உத்தரவுபடி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News