செய்திகள்

கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் - ஸ்டாலின்

Published On 2018-07-27 13:48 GMT   |   Update On 2018-07-27 13:48 GMT
கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #Karunanidhi #DMK #MKStalin
சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று பின்னிரவில் சற்று நலிவை சந்தித்தது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கோபாலபுரம் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர்.

கருணாநிதி பூரண நலம் பெற வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துச் செய்திகளையும் பிராத்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிற்பகலுக்கு பின்னர் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் சிறுநீரகத்தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக மருவத்துவர்கள் குறிப்பிட்டனர். இதற்கிடையில், இன்று மாலையில் சமூக வலைதளங்களில் கருணாநிதியை பற்றி விரும்பத்தகாத சில தகவல்கள் வதந்திகளாக உலா வந்தன.

இதனை தொடர்ந்து, வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக மக்களை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருணாநிதிக்கு 24 மணிநேரமும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். 

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அவரை சந்திக்க வருவதை பொதுமக்களும், தொண்டர்களும் தவிர்க்க என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News