செய்திகள்

திருச்சியில் பல்வேறு இடங்களில் கைவரிசை: 5 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது

Published On 2018-07-19 17:44 GMT   |   Update On 2018-07-19 17:44 GMT
திருச்சியில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி, 5 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி பாலக்கரை, எடத்தெரு ரோடு கீழப்படையாச்சி தெருவை சேர்ந்தவர் நடராஜன். தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காந்தி மார்க்கெட் 6-ம் எண் நுழைவாயில் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருச்சி மாநகரில் திருட்டுபோகும் மோட்டார் சைக்கிள்களை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன திருடர்கள் தேடப்பட்டு வந்தனர். இந்த தனிப்படையினர் விஸ்வாஸ்நகர் பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது பெயர் விஜய் (வயது28) என்பதும், திருச்சி மேலஅம்பிகாபுரம் ரெத்தினசாமி தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நடராஜனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் விஜயை கைது செய்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

விசாரணையில், மேலும் 4 இடங்களில் அவர் மோட்டார் சைக்கிள்கள் திருடியதை ஒப்புக்கொண்டார். அதன்படி, திருச்சி-தஞ்சை ரோட்டில் உள்ள பூக்கொல்லை தெருவை சேர்ந்த சதாம் உசைன் என்பவர் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், திருச்சி நரசிம்மநாயுடு தெருவை சேர்ந்த ஆரோக்கிய செல்வராஜ்(38) தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள், தஞ்சை ரோடு ரம்பைகார தெருவை சேர்ந்த அப்துல்நசீர்(33)என்பவரின் மோட்டார் சைக்கிள், திருச்சி ராஜீவ்காந்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த செந்தில்குமார்(40)பழைய பால்பண்ணை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் விஜய் திருடி இருந்தார்.

அவர் சொன்ன தகவலின் அடிப்படையில் 4 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன. மோட்டார் சைக்கிள் திருடனை பிடித்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார். 
Tags:    

Similar News