செய்திகள்

பெரம்பலூர் அருகே மணல் கடத்திய லாரி-டிராக்டர் பறிமுதல்: டிரைவர்கள் கைது

Published On 2018-07-10 10:49 GMT   |   Update On 2018-07-10 10:49 GMT
பெரம்பலூர் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே பணங்கூர்ஓடை உள்ளது. இந்த ஓடையில் அடிக்கடி மணல் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இந்தநிலையில் மர்ம நபர் ஒருவர் டிராக்டரில் மணல் அள்ளுவதாக மருவத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் பணங்கூர் ஓடைக்கு சென்றார். அப்போது போலீசாரை பார்த்ததும் மணல் அள்ளிக்கொண்டிருந்த மர்ம நபர் தப்பி ஓட முயற்சித்தார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர் அரியலூர் மாவட்டம் குவாகத்தை சேர்ந்த சரவணன் (வயது 24) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததோடு, டிராக்டரையும் அதிலிருந்த 4 யுனிட் மணலையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மருவத்தூர் அருகே உள்ள மருதையாற்று பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மருதையாற்றில் லாரியை நிறுத்தி ஒருவர் மணல் அள்ளிக்கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது, அவர் மருவத்தூர் அருகே உள்ள குறும்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் அரவிந்தசாமி (21) என்பது தெரியவந்தது. அவரின் லாரி மற்றும் அதில் அள்ளப்பட்ட 2 யுனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News