செய்திகள்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்க வாய்ப்பு

Published On 2018-06-18 13:31 GMT   |   Update On 2018-06-18 14:22 GMT
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் நீதிபதிகளின் இருவேறு மாறுபட்ட தீர்ப்புகளை அடுத்து, 3-வது நீதிபதியாக நீதிபதி விமலா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #MLAdisqualifiedcase #TNassembly
சென்னை:

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சிக்கல்களில் ஆளும் அதிமுக அரசுக்கு ஏற்பட்ட மிக முக்கிய சிக்கல்களில் ஒன்று 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் ஆகும். சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன், அவர்களுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து முதல்வரை மாற்ற வேண்டும் என மனு அளித்தனர்.

இதனை அடுத்து, அதிமுக சட்டமன்ற கொறடா கோரிக்கையின் பெயரில் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதையடுத்து, பெரும்பான்மையில் அதிமுக அரசு ஆட்டம் கண்டது மட்டுமல்லாமல், சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது பெரும் தலைவழியாக அமைந்தது. வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் முடிந்தாலும், தீர்ப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.



இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதியரசர் சுந்தரோ, சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது தவறு என்றும், தகுதிநீக்கம் செல்லாது என்றும் தனது தீர்ப்பை அறிவித்தார்.

மாறுபட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரித்து இறுதி தீர்ப்பு அளிப்பார் என அறிவிக்கப்பட்டது. மூன்றாவது நீதிபதி யார் என்பதை, மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கை வாபஸ் பெற்று விடுவதாகவும், அந்தந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை அறிவிக்குமாறும், 18 எம்.எல்.ஏக்களில் ஒருவரான தங்கத்தமிழ்ச்செல்வன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், இதர எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்யவும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக, மூத்த நீதிபதி விமலா நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #MLAdisqualifiedcase #TNassembly
Tags:    

Similar News