செய்திகள்

வால்பாறையில் பெண்களை தாக்கிய சிறுத்தைப்புலி சிக்கியது

Published On 2018-06-18 04:01 GMT   |   Update On 2018-06-18 04:01 GMT
வால்பாறையில் சிங்கோனா எஸ்டேட் பகுதியில் பெண்களை தாக்கி வந்த சிறுத்தைப்புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. பின்னர் அது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.
வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் மற்றும் பெரியகல்லார் எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இந்த சிறுத்தைப்புலி மாலை மற்றும் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தொழிலாளர்களையும் தாக்கி படுகாயப்படுத்தியது.

கடந்த மே மாதம் 25-ந் தேதி சத்யா(வயது10) என்ற சிறுமியையும், சிங்கோனா எஸ்டேட் பகுதியில் ஜூன் மாதம் 1-ந் தேதி சந்திரமதி (45) என்ற பெண் தொழிலாளியையும் தாக்கியது. ஜூன் 14-ந் தேதி சிங்கோனா எஸ்டேட் பகுதியில் மாதவி (35) என்ற இன்னொரு பெண் தொழிலாளியை கடித்துக் குதறியது. இவர்கள் அனைவரும் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் மற்றும் உயர் வனத்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் வனத்துறையினர் சிங்கோனா எஸ்டேட் பகுதியில் கூண்டுகள் வைத்தனர். மேலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் கேமராவில் சிறுத்தைப்புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை. இந்தநிலையில் காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் கைலாசவதி என்ற பெண் தொழிலாளியை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது.

இதனால் அப்பகுதி தொழிலாளர்கள் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களுடன் இணைந்து வால்பாறைநகர் பகுதியில் சாலைமறியல் போராட்டமும் நடத்தினர்.

இந்தநிலையில் சிங்கோனா எஸ்டேட் முதல்பிரிவு பகுதியில் மாதவி என்ற பெண் தொழிலாளியை சிறுத்தைப்புலி தாக்கிய இடத்திற்கு அருகில் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். அந்த கூண்டில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிறுத்தைப் புலி சிக்கியது. இதனால் சிங்கோனா எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். வால்பாறை பகுதியை பொறுத்தவரை கடந்த 10 மாதங்களில் 10 குழந்தைகளை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றுள்ளது.

சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கிய தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து தலைமையில் வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் மற்றும் வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலியை பார்வையிட்டனர். இதை அறிந்த சிங்கோனா, வால்பாறை, காஞ்சமலை எஸ்டேட் பகுதி பொதுமக்கள் சிங்கோனாவில் குவிந்தனர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கூண்டில் சிக்கியது 7 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தைப்புலி ஆகும். இப்போது அதிநவீன கூண்டுகள் இருப்பதால் சிறுத்தைப்புலிக்கு மயக்க ஊசி செலுத்தவேண்டிய அவசியமில்லை. எனவே சிறுத்தைப்புலி சிக்கிய கூண்டையே அப்படியே லாரியில் ஏற்றி சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்திருக்கிறோம்” என்றனர். பிடிபட்ட சிறுத்தைப்புலி நேற்று இரவு வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News