செய்திகள்

ஓசூரில் போலி பணி ஆணை வழங்கி வாலிபரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி

Published On 2018-06-12 13:56 GMT   |   Update On 2018-06-12 13:56 GMT
ஓசூரில் போலி பணி ஆணை வழங்கி வாலிபரிடம் ரூ.2.50 லட்சம் மோசடி செய்ததாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஒருவர், வாலிபர் ஒருவரிடம் கணக்காளர் வேலை இருப்பதாக கூறி கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபாலின் கையெழுத்திட்ட பணி ஆணை வழங்கி உள்ளார்.

மேலும் அதற்காக வாலிபரிடம் இருந்து அந்த மின்வாரிய அலுவலர் ரூ.2.50 லட்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வாலிபர் பணி நியமன ஆணையை பொறியாளர் நந்தகோபாலிடம் வழங்கினார். அப்போது அதில் உள்ள கையெழுத்து தன்னுடையது இல்லை எனவும், அது போலியான பணி நியமன ஆணை எனவும் பொறியாளர் தெரிவித்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணி நியமன ஆணையை கொடுத்தது ஓசூர் மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அந்த நபர் என தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய பொறியாளர் நந்தகோபால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாரிடம் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த நபர் இதை போல வேறு யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News