செய்திகள்

விமான நிலைய மோதல் சம்பவம் திருச்சி கோர்ட்டில் ம.தி.மு.க. நிர்வாகிகள் சரண்

Published On 2018-06-11 08:41 GMT   |   Update On 2018-06-11 08:41 GMT
திருச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து மதிமுக நிர்வாகிகள் கோர்ட்டில் சரணடைந்தனர்.
திருச்சி:

தஞ்சையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 19-ந்தேதி ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்களை வரவேற்க இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர்.

அப்போது நாம் தமிழர் கட்சி தொண்டர் ஒருவர் , வைகோ குறித்து தெரிவித்த கருத்தால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கொடி கம்பத்தால் தாக்கி மோதிக்கொண்டனர். இதில் ம.தி.மு.கவை சேர்ந்த 2பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ம.திமு.க.வின் திருச்சி மாநகர் மாவட்ட பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சீமான், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபு உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 5பேர் கைது செய்யப்பட்டனர். சீமான் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.

இதனிடையே ஏர்போர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும், போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது புகார் செய்தார். அதன் பேரில் சீமான் மற்றும் ம.தி.மு.க. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு உள்பட இரு தரப்பினரை சேர்ந்த பலர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர் வெல்ல மண்டி சோமு, நிர்வாகிகள் ராஜமாணிக்கம், சுப்பிரமணி உள்பட 6 பேர் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 6 ல் சரணடைந்தனர். அவர்களுக்கு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். #tamilnews
Tags:    

Similar News