செய்திகள்

செட்டிக்குளத்தில் 8 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை

Published On 2018-06-04 15:13 GMT   |   Update On 2018-06-04 15:13 GMT
செட்டிக்குளம் பொதுப் பணித்துறை அலுவலக சாலையில் உள்ள 8 கடைகளின் பூட்டுகளை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் செட்டிக்குளம் பொதுப் பணித்துறை அலுவலக சாலையில் ஒர்க்ஷாப், வக்கீல் அலுவலகம், பில்டிங் டிசைன் அலுவலகம் உள்பட வரிசையாக கடைகள் உள்ளது. நேற்று வேலை முடிந்து கடை மற்றும் அலுவலகத்தை பூட்டி விட்டுச் சென்ற உரிமையாளர்கள் இன்று காலை வழக்கம்போல கடைகளை திறக்க வந்தனர். அப்போது செல்வநாயகம் என்பவரின் டிங்கரிங் ஒர்க்ஷாப், வக்கீல் சுதர்சன் என்பவரின் அலுவலகம், வீரமணிகண்டன் என்பவரின் ரேடியேட்டர் கடை உள்பட 8 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. 

உள்ளே சென்று பார்த்த போது ஒவ்வொரு கடையிலும் கல்லா பெட்டியில் உள்ள ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலான ரொக்கப்பணம் கொள்ளை போய் இருந்தது. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் அடுத்தடுத்து 8 கடைகளிலும் கைவரிசை காட்டிச் சென்றது தெரியவந்தது. 

இதுபற்றி கடைகளின் உரிமையாளர்களின் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

செட்டிக்குளம் சந்திப்பில் இருந்து பொதுப்பணித்துறை அலுவலகம் செல்லும் சாலை எப்போதும் ஆழ்நடமாட்டம் உள்ளபகுதியாகும். இரவிலும் இங்கு தொழிலாளர்கள் நடமாட்டம் இருக்கும். இந்த பகுதியில் ஒரே நேரத்தில் 8 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த துணிகர செயலில் ஈடுபட்ட கொள்ளையர்களை கண்டுபிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பதை கண்டறிய போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.                                                                        
Tags:    

Similar News