செய்திகள்

சேலத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சி - சீமான், பாரதிராஜா மீது டி.ஜி.பி.யிடம் புகார்

Published On 2018-06-04 10:11 GMT   |   Update On 2018-06-04 10:11 GMT
பசுமை வழி சாலை திட்டம் மூலம் சேலத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாக பாராதிராஜா, வைகோ, திருமாவளவன், சீமான் மீது டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சேலத்தை சேர்ந்த தேசிய மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் மணிகண்டன் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை சந்தித்து இன்று புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

சேலத்தில் வசித்து வரும் வடநாட்டை சேர்ந்த பீயூஸ் மனுஷ் என்ற நபர் பசுமை வழி சாலை திட்டத்தை சீர்குலைக்கவும், சேலம் தர்மபுரி திருவண்ணாமலை ஆகிய வடமாவட்டங்களில் கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார்.

இவர் கடந்த மாதம் நடிகர் மன்சூர் அலிகானை சேலத்திற்கு வரவழைத்து ‘‘சேலம்-சென்னை பசுமை வழி சாலை போட நிலம் எடுக்க வரும் அரசாங்க ஊழியர்களின் கையை வெட்டுவேன்’’ என பேட்டி கொடுக்க செய்து வன்முறையை தூண்டி உள்ளார்.

சீமான், வேல்முருகன், திருமாவளவன், வைகோ, இயக்குநர்கள் அமீர், கவுதமன், பாரதிராஜா, வெற்றிமாறன், சுப.உதயகுமார், திருமுருகன் காந்தி, மன்சூர் அலிகான் மற்றும் பூலோக நண்பர்கள், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர்கள் அமைப்பு ஆகியோரை சேலத்திற்கு அழைத்து வந்து சேலம் மக்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

எனவே இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் சேலம் தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நுழைய உடனடியாக தடைவிதித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ள தடை விதிக்குமாறும் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News