இந்தியா

ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Published On 2024-05-24 10:32 GMT   |   Update On 2024-05-24 10:32 GMT
  • கேரளாவில் பெய்துவரும் மழைக்கு 6 பேர் பலியாகினர்.
  • மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது.

இதற்கிடையே, கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மேலும் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

கடலில் அலைகள் உயரமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்லக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News