சக வீரரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற CAF வீரர்.. ஆயுதப்படை முகாமில் நடந்த பயங்கரம்
- நள்ளிரவில் அரவிந்த் கௌதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
- உயிரிழந்த வீரர் மற்றும் கொலையாளி ஆகிய இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
சத்தீஸ்கர் மாநிலத்தில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த சக வீரரை, ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டத்தில் உள்ள காக்ரா அடிப்படை முகாமில் சத்தீஸ்கர் ஆயுதப்படையின் (CAF) 17-வது பட்டாலியன் பிரிவு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாமில் காவலராகப் பணியாற்றி வந்த அரவிந்த் கௌதம் என்பவருக்கும், மெஸ் கமாண்டராக இருந்த சோன்பீர் ஜாட் என்பவருக்கும் இடையே நேற்று இரவு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தனிப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தொடங்கிய இந்த மோதல், இருவருக்கும் இடையே முற்றிய நிலையில் கடும் மோதலாக மாறியது.
இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் அரவிந்த் கௌதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், முகாமின் பாரக் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சோன்பீர் ஜாட்டை, அரவிந்த் கௌதம் தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சோன்பீர் ஜாட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற வீரர்கள், சோன்பீர் ஜாட் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த வீரரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் கௌதமை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வீரர் மற்றும் கொலையாளி ஆகிய இருவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.