இந்தியா

சிறுமியிடம் ஆபாச கமெண்ட் செய்த சிறுவர்கள்...வளர்ப்பு சரியில்லை என தாய்மார்களை கைது செய்த உ.பி.காவல்துறை!

Published On 2025-12-22 21:45 IST   |   Update On 2025-12-22 21:45:00 IST
  • சிறுவர்கள் மீது BNS மற்றும் POCSO சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
  • குழந்தைகளை வளர்ப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது பெற்றோரிடமே உள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் புடான் மாவட்டத்தில் உள்ள புடான் நகரில், 8 ஆம் வகுப்பு மாணவியை பள்ளிக்குச் செல்லும் வழியில் வழிமறித்து 4 மாணவர்கள் சேர்ந்து ஆபாசமாக பேசி கிண்டலடித்துள்ளனர். இதனை பாதிக்கப்பட்ட மாணவி அவளது தந்தையிடம் கூறியுள்ளார். தொடர்ந்து மாணவர்களின் இந்த செயல் தொடர சிறுமியின் குடும்பத்தினர் உசேத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து சிறுவர்கள் மீது BNS மற்றும் POCSO சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தொடர்ந்து இந்த சிறுவர்களின் தாய்மார்களை கைது செய்துள்ளனர் போலீசார். இதுதொடர்பாக காவல் நிலைய பொறுப்பாளர் அஜய் பால் சிங் கூறுகையில், "நான்கு சிறுவர்களும் பள்ளிக்குச் செல்லாமல் வளாகத்திற்குள் சுற்றித் திரிந்து வந்துள்ளனர். சிறுவர்கள் 13 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 

இந்த சிறுவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் மீண்டும் துன்புறுத்தினர். சிறுவர்கள் ஒழுக்கமில்லாமல் இருப்பதும், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் அடிக்கடி ஈடுபடுபவர்கள் என்றும் அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்ததில் தெரியவந்துள்ளது. குழந்தைகளை வளர்ப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது பெற்றோரிடமே உள்ளது. இந்தத் தெளிவான செய்தியை பெற்றோருக்குத் தெரிவிக்க தாய்மார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என தெரிவித்தார். 

தொடர்ந்து, கைது செய்யப்படுவதற்கு முன்பு, வழக்கு தொடர்பான அறிவிப்புகள் சிறுவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டன. இதுபோன்ற வழக்குகளில், சிறார்களுக்கு எதிராக குற்றங்கள் பதிவு செய்யப்படும்போது, அவர்களின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று சிங் மேலும் தெளிவுபடுத்தினார். நான்கு சிறுவர்களின் தந்தையர்களும் உத்தரபிரதேசத்திற்கு வெளியே வேலை செய்கிறார்கள். அவர்கள் வீடு திரும்பியதும் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். 

நான்கு பெண்களும் கைது செய்யப்பட்ட பிறகு, அதே நாளில் அவர்கள் துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் தனிநபர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்

Tags:    

Similar News