இந்தியா

ஏஐ மாநாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய சீன ரோபோ... மன்னிப்பு கோரியது கல்கோடியாஸ் பல்கலைக்கழகம்..!

Published On 2026-02-18 18:23 IST   |   Update On 2026-02-18 18:23:00 IST
  • கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.
  • எங்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு தவறான தகவல் கிடைத்துவிட்டது.

டெல்லியின் பாரத் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது.5 நாட்கள் நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி நீட்டிக்கப்பட்டு தற்போது இந்த மாநாடு வரும் 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டுடன், 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் உத்தரப் பிரதேசத்தின் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் ஓரியன் என்ற பெயரிடப்பட்ட ஒரு ரோபோ நாயைக் காட்சிப்படுத்தியது. இது அந்தப் பல்கலைக்கழகத்தின் சொந்தக் கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில் சீனாவின் 'Unitree Go2' என்ற நிறுவனத்தின் தயாரிப்பு என்றும், அதன் மீது பல்கலைக்கழகத்தின் முத்திரை மட்டுமே ஒட்டப்பட்டிருப்பதாகவும் பின்னர் தெரியவந்தது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரோபோவின் வீடியோவை ஆரம்பத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பின்னர் சர்ச்சை வெடித்ததும் அந்தப் பதிவு நீக்கப்பட்டது. கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், கண்காட்சியில் சீன ரோபோ காட்சிப்படுத்தப்பட்ட விவகாரத்தில் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்திய ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நாங்கள் மிகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

பெவிலியனை நிர்வகித்த எங்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு தவறான தகவல் கிடைத்துவிட்டது. தயாரிப்பின் தொழில்நுட்ப தோற்றம் குறித்து அவருக்குத் தெரியாது, மேலும் கேமராவில் இருக்கும் ஆர்வத்தில், பத்திரிகையாளர்களிடம் பேச அவருக்கு அதிகாரம் இல்லை என்றாலும், உண்மையில் தவறான தகவல்களைக் கொடுத்தார். ஏற்பாட்டாளர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு நாங்கள் வளாகத்தை காலி செய்துவிட்டோம்," என்று தெரிவித்தது.

Tags:    

Similar News