செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட இதுவே சரியான தருணம் - கி.வீரமணி அறிக்கை

Published On 2018-05-25 02:14 GMT   |   Update On 2018-05-25 02:14 GMT
நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க இதுவே சரியான தருணம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னை :

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க எந்தவித விதிமுறைகள், நியதிகளைப் பின்பற்றாமல் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தைப் பார்க்கும்போது இனி போராட்டம், மக்கள் பேரணி என்று நடத்தினால் துப்பாக்கிச்சூடு தான் என்று அச்சுறுத்துவதற்காகவே நடத்தப்பட்டதாக கருத வேண்டி உள்ளது.

நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க இதுவே சரியான தருணம். இதில் சுணக்கம் காட்டப்படுமேயானால், மக்கள் போராட்டம் என்பது கலவரமாக எங்கும் பரவக்கூடிய ஆபத்து இருப்பதை அரசு உணரத் தவறக் கூடாது.

துப்பாக்கி சூடு பற்றி விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தீர விசாரித்து அறிக்கையை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.

துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு தொடுத்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News