செய்திகள்

மு.க.ஸ்டாலினால் அ.தி.மு.க.வை ஒருநாளும் உடைக்க முடியாது- முதலமைச்சர் பழனிசாமி

Published On 2018-05-04 05:07 GMT   |   Update On 2018-05-04 05:07 GMT
மு.க.ஸ்டாலினைப்போல, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை உடைக்க முடியாது என்று ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை:

புரட்சிப் பாரதம் கட்சியின் 40-ம் ஆண்டு விழா ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றனர்.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் புரட்சித் தலைவி அம்மா தமிழகத்தின் கடைகோடியில் வாழும் நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இன மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார். இரு மாபெரும் தலைவர்களது வழியில், அம்மாவின் அரசு தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தங்களுக்குரிய பங்கினை அடைய வேண்டும் என்று செயலாற்றி வருகிறது.

இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், பொது வாழ்க்கையில் தங்களுக்குரிய பங்கினை பெற வேண்டும் என்று, தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த, இந்தியாவின் அரசியலமைப்பினை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் வழியில் தமிழகத்திலும் பல தலைவர்கள் உருவானார்கள். அவர்களில் ஒருவர் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் காலஞ்சென்ற டாக்டர். பூவை. மூர்த்தியார்.

இன்று புரட்சி பாரதம் என்ற அரசியல் கட்சியாக, தாழ்த்தப்பட்டோரின் கல்வி மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும், ஒட்டு மொத்த தமிழர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் இயக்கமாக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

அம்மா தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக செய்த பணிகள் ஏராளம்.

காவிரி நதிநீர் பிரச்சனைக்காக அம்மா சட்டப் போராட்டம் நடத்தி, அதன் வாயிலாக, நமக்கு நீதி கிடைக்கவேண்டுமென்று உச்சநீதிமன்றத்தை நாடி, விரைவிலே நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். பொதுமக்களுடைய எண்ணங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து, காவிரி நதிநீர் பிரச்சனையில் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்றோம், உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அ.தி.மு.க. கட்சியை உடைக்கவும், ஆட்சியைக் கவிழ்க்கவும் தி.மு.க.வின் செயல்தலைவர் முயன்று கொண்டிருக்கிறார் என்று சகோதரர் பூவை.ஜெகன்மூர்த்தி சொன்னார், இந்த ஸ்டாலினைப்போல, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை உடைக்க முடியாது. ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒருபோதும் பலிக்காது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடைய மேம்பாட்டிற்காக அம்மாவினுடைய அரசு தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்து, ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கட்டணம் முழுமையாக அரசால் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalanisamy
Tags:    

Similar News