செய்திகள்

நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு

Published On 2018-04-21 01:47 GMT   |   Update On 2018-04-21 01:47 GMT
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக உள்ளனர். #nirmaladevi
விருதுநகர்:

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் உள்ள சி.பி.சி. ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதேபோல் மற்ற விசாரணை குழுவினர் தேவாங்கர் கல்லூரிக்கு சென்று முதல்வர் பாண்டியராஜன் மற்றும் பேராசிரியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட 4 மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

நிர்மலாதேவி கொடுத்த வாக்குமூலத்தில், மாணவிகளிடம் தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேச, காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 உதவி பேராசிரியர்கள் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில், பல்கலைக்கழகத்துக்கு விசாரணைக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. குழுவினர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதோடு, நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 உதவி பேராசிரியர்கள் பற்றி விசாரித்த போது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது.

இது பற்றி விசாரணைக்குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது;-

நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களும் தலைமறைவாகி உள்ளதில் இருந்தே அவர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி ஆகி உள்ளது. அவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நிர்மலாதேவியை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கிடைத்துள்ளது. அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார் என நம்புகிறோம். விசாரணையின் போது அவர் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இப்பிரச்சினையில் விசாரணை நடத்த கவர்னரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழுவினர் நேற்று அருப்புக்கோட்டை கல்லூரிக்கு சென்று பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர். #tamilnews #nirmaladevi
Tags:    

Similar News