செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோவின் வாகன பிரசாரம் இன்று மாலை தொடக்கம்

Published On 2018-04-17 05:04 GMT   |   Update On 2018-04-17 05:04 GMT
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் வாகன பிரசாரம் இன்று மாலை தொடங்குகிறது. #sterliteprotest
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அ.குமரெட்டியாபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

தொடர்ந்து பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியாபுரம், சங்கராப்பேரி, மீளவிட்டான், மடத்தூர், முருகேசன் நகர், 3-வது மைல், சில்வர்புரம், தபால்தந்தி காலனி, மாதவன்நகர், சிலோன் காலனி, முத்தம்மாள்காலனி, பனிமயமாதா ஆலயம் உள்ளிட்ட 16 இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

பொதுமக்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் போராட்டம் இன்று 64-வது நாளாக நீடிக்கிறது. தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடந்து வருகிறது.

இன்று 3-வது நாளாக அங்கு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் தூத்துக்குடி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக சிப்காட் போலீசில் 22 வழக்குகள் பதிவாகி உள்ளது. 180 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக இன்று மாலை தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.


இந்த கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். இதற்காக டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று இரவு கார் மூலம் கடம்பூர் வந்தார். அங்கிருந்து இன்று மதியம் புறப்பட்டு ஓட்டபிடாரம் அருகே உள்ள கவர்னகிரிக்கு செல்கிறார். அங்கு வீரன்சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் உள்ள சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் தூத்துக்குடி வரும் அவருக்கு தட்டப்பாறையில் கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர்.

பின்னர் அவர் தூத்துக்குடியில் உள்ள விடுதியில் ஓய்வு எடுக்கிறார். இதன் பிறகு மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாட்கள் வாகன பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 4 மணிக்கு கோவில்பட்டியில் வாகன பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து எட்டயபுரம், புதூர், சூரங்குடி, வைப்பார், குளத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

நாளை கரிசல்குளத்தில் தொடங்கி காமநாயக்கன் பட்டி, பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், புதியம்புதூர் ஆகிய இடங்களிலும், 21-ந்தேதி செய்துங்கநல்லூரில் தொடங்கி ஆழ்வார்திருநகரி, நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, உடன்குடி ஆகிய இடங்களிலும்,

22-ந்தேதி ஸ்ரீவைகுண்டத்தில் தொடங்கி ஏரல், வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆலந்தலை, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, பெரியதாழை ஆகிய இடங்களிலும் வாகன பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இதையடுத்து 28-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார்.
Tags:    

Similar News