செய்திகள்

சென்னை முன்னாள் மேயர் சா.கணேசன் மரணம்

Published On 2018-04-14 08:03 GMT   |   Update On 2018-04-14 08:03 GMT
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் தி.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சா.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

சென்னை:

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் தி.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சா.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.

சா.கணேசன் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வால் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

சா.கணேசனுக்கு அழகிரி, அண்ணாதுரை ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தி.மு.க.வில் தொடக்க காலம் முதலே இருந்து வந்த சா.கணேசன் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். தி.மு.க. தலைமை அலுவலக செயலாளராகவும் இருந்து வந்தார்.

பிஅன்சிமில் என்று அழைக்கப்படும் பக்கிங் ஹாம் கர்நாட்டிக் மில்லில் விற்பனையாளராக பணி புரிந்து வந்த போது அவர் தி.நகர் பகுதியில் இருந்து 1959, 1964, 1968-ம் ஆண்டுகளில் நடந்த மாநகராட்சி உறுப்பினர் தேர்தல்களில் தொடர்ந்து 3 முறை தேர்வு செய்யப்பட்டார். 1970 நவம்பர் முதல் 1971 நவம்பர் வரை சென்னை உள்ள மாநகராட்சிகளில் ஒரே மாதிரியான வரி விதிக்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அளித்தார்.

அவர் மேயராக பதவி வகித்த போது சென்னை மாநகராட்சி கூட்டத்தில் வங்கதேசம் தனிநாடாக உருவாக மத்திய அரசு உதவ முன்வர வேண்டும். வீராணம் ஏரிக்கு காவிரி நீர் கொண்டு வர, காவிரி நீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.நகர் சட்டப்பேரவை தொகுதியில் 1989-ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1991-ம் ஆண்டு வரை பணியாற்றினார். #tamilnews

Tags:    

Similar News