செய்திகள்

காதல் திருமணம் செய்த மாணவியை கடத்த முயன்ற 2 பேர் கைது

Published On 2018-03-27 10:11 GMT   |   Update On 2018-03-27 10:11 GMT
அகஸ்தீஸ்வரம் அருகே காதல் திருமணம் செய்த மாணவியை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்தாமரைகுளம்:

ராமநாதபுரம் சாயல்குடி பரப்பாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மனைவி பிச்சுமணி. இவர்களது மகள் ஞானசவுந்தரி (20) அங்குள்ள கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்தார்.

அப்போது அவரை பயிற்சிக்காக கல்லூரி நிர்வாகம் கொட்டாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள விடுதியிலேயே தங்கி ஞானசவுந்தரி பயிற்சி பெற்றார்.

அப்போது அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சமாதானபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் சுபாஷ் என்ற வாலிபருடன் ஞானசவுந்தரிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் காதலர்களாக மாறினர். சுபாசும், ஞானசவுந்தரியும் பல மாதங்களாக தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் ஞானசவுந்தரியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதல் ஜோடி எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி மாதம் நெல்லையில் உள்ள ஒரு ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானசவுந்தரியின் பெற்றோர், சாயல்குடி போலீசில் தங்கள் மகள் ஞானசவுந்தரி காணாமல் போய் விட்டதாகவும், அதனால் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதையறிந்த ஞானசவுந்தரி, தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், காதலனுடன் திருமணம் செய்து கொண்டு குமரி மாவட்டத்தில் வசிப்பதாகவும் சாயல்குடி போலீசார் கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார்.

அதன்பிறகும் விடாமல் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திலும் ஞானசவுந்தரியின் பெற்றோர் புகார் செய்தார். போலீசார் ஞானசவுந்தரியையும், அவரது கணவர் சுபாசையும் அழைத்து விசாரித்தனர். அப்போது தங்களுடன் வந்து விடும்படி கூறி ஞானசவுந்தரியிடம் பெற்றோர் மன்றாடினர். ஆனால் ஞானசவுந்தரி, சுபாசுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதனால் போலீசார் சமாதானப்படுத்தி ஞானசவுந்தரியை சுபாசுடன் அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக ஞானசவுந்தரியின் பெற்றோர் தங்களது உறவினரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான பாஸ்கரன் என்பவரிடம் தெரிவித்தனர். அவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி காமராஜர் நகரைச் சேர்ந்த மார்டின் விமல் (32), அட்லின் அமல் (28) ஆகியோரிடம் தெரிவித்து நேரில் போய் பேசி விட்டு வரும் படி கூறியிருக்கிறார்.

அதன்படி மார்டின் விமல், அட்லின் அமல் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் அகஸ்தீஸ்வரம் சமாதானபுரத்துக்கு வந்தனர். அப்போது சுபாசின் வீட்டில் சுபாஷ், அவரது தந்தை மற்றும் ஞானசவுந்தரி ஆகியோர் இருந்தனர். அவர்களில் ஞானசவுந்தரியை தனியாக அழைத்து 2 பேரும் பேசினர். நாங்கள் 2 பேரும் உனது உறவினர்கள் தான், நீ சுபாசை விட்டு விட்டு எங்களுடன் வந்து விடு, உன்னை பெற்றோருடன் சேர்த்து விடுகிறோம் என கூறினர்.

ஆனால் அவர்களது சமாதான பேச்சை ஞானசவுந்தரி கேட்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் மோட்டார்சைக்கிளில் ஞானசவுந்தரியை கடத்திச் செல்ல முயன்றனர். இதனால் ஞானசவுந்தரி சத்தம் போட்டு அலறினார். உடனே சுபாசும், அவரது தந்தையும் ஓடி வந்து மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரையும் கண்டித்தனர். ஆத்திரம் அடைந்த 2 பேரும் சுபாஷ், அவரது தந்தை ஆகியோரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதுகுறித்து ஞானசவுந்தரி தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஞானசவுந்தரியின் தந்தை அந்தோணி ராஜ், தாயார் பிச்சுமணி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாஸ்கரன், மார்ட்டின் விமல், அட்லின் அமல் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் மார்ட்டின் விமல், அட்லின் அமல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகிறார்கள். #tamilnews


Tags:    

Similar News