செய்திகள்

காரில் கடத்திய 1¼ கிலோ கஞ்சாவுடன் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

Published On 2018-02-26 06:26 GMT   |   Update On 2018-02-26 06:26 GMT
கோவையில் காரில் கடத்திய 1¼ கிலோ கஞ்சாவுடன் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை:

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக சேரன்மாநகர் வழியாக ஒரு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சேரன்மாநகர் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 1¼ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்த நவீன் (வயது 20), ஊட்டியை சேர்ந்த டிவைன் குமார்(21) என்பது தெரியவந்தது. கல்லூரி மாணவர்களான இருவரும் பீளமேடு பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். சக நண்பர் ஒருவர் மூலமாக தேனியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து நண்பர்களுக்கு வினியோகம் செய்வது தெரிய வந்தது. கஞ்சா கடத்த பயன்படுத்திய கார் மற்றும் அவர்களது 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் மற்றும் போலீசார் காமராஜர் சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேரன் மாநகரை சேர்ந்த ஹரிஷ் சச்சின்(23) என்பவர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். அவரை தடுத்து நிறுத்தி மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தனர். அதில் 200 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து ஹரிஷ் சச்சினை போலீசார் கைது செய்தனர். இவர் பீளமேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

இதேபோல மசக்காளி பாளையத்தில் கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அதேபகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்(23) என்பவரையும் சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவைப் புதூர் பகுதியில் கஞ்சா விற்றதாக சென்ற மதுரை மாவட்டம் கரைத் துறை பகுதியை சேர்ந்த சிவப் பிரகாஷ் (19) என்பவரை கைது செய்தனர். இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரில் படித்து வருகிறார்.

கைதான 5 பேருமே கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வருபவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்த புரோக்கர்கள் பற்றிய விபரம் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அதன் பேரில் அவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News