செய்திகள்

அரும்பாக்கத்தில் பெண்ணை ரோட்டில் இழுத்துச்சென்று சங்கிலியை பறித்த கொள்ளையன் கைது

Published On 2018-02-21 02:46 GMT   |   Update On 2018-02-21 02:46 GMT
அரும்பாக்கத்தில் பெண்ணை ரோட்டில் தரதரவென இழுத்துச்சென்று சங்கிலியை பறித்த கொள்ளையர்களில் ஒருவன் பிடிபட்டான்.
கோயம்பேடு:

சென்னை அரும்பாக்கம், திருவள்ளுவர் சாலையில் கடந்த 11-ந்தேதி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்த வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மேனகா என்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தங்க சங்கிலிகளை பறிக்க முயன்றனர்.

சங்கிலி அறுந்துவராத நிலையில் தடுமாறி கீழே விழுந்த மேனகாவை அவர்கள் விடாமல் ரோட்டில் சிறிது தூரம் இழுத்துச்சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த கொடூரமான காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த கொள்ளையர்களை பிடிக்க கோயம்பேடு உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணையில் திருவல்லிக்கேணி, அயோத்திகுப்பத்தைச் சேர்ந்த வீரன் என்பவரின் மகன் அருண்குமார் என்கிற நூர்சா(வயது24) கொள்ளையர்களில் ஒருவன் என்பது உறுதி செய்யப்பட்டது.

அருண்குமாரை தனிப்படை போலீசார் நேற்று சுற்றிவளைத்தனர். அப்போது அவன் தப்பி ஓட முயன்றபோது தடுமாறி கீழே விழுந்ததில் அவனது வலது கை முறிந்தது.

அவனை கைது செய்து அவனிடமிருந்து 6 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்த கோயம்பேடு போலீசார், அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மற்றொரு கொள்ளையன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளான். அவனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அருண்குமார் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 12 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே அவன் 2 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Tags:    

Similar News