செய்திகள்

கைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

Published On 2018-02-17 07:18 GMT   |   Update On 2018-02-17 07:18 GMT
கைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை எல்லாம் மத்திய மாநில அரசுகள் முக்கிய கவனத்தில் கொண்டு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப் பதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில வருடங்களாக முன்வைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் கைத்தறி நெசவு செய்து வருகின்ற வேலையில் தங்களுக்கு 30 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர்.

அது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டும் இது வரையில் கூலி உயர்வு வழங்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதேபோல கைத்தறி பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கும் 30 சதவீத கூலி உயர்வு வழங்கப்படவில்லை என்பது கண்டிக்கத்தக்கது.

இக்கட்டான சூழலில் நெசவாளர்கள் தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும், வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், பட்டுக்கு ஜி.எஸ்.டி. வரி கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு முன் வைக்கின்றனர்.

இந்த கோரிக்கைகளை எல்லாம் மத்திய மாநில அரசுகள் முக்கிய கவனத்தில் கொண்டு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News