செய்திகள்

நிலத்தை நனைக்க கேட்ட நீரில் நதி நனைய மட்டுமே கிடைத்துள்ளது - வைரமுத்து ஆதங்கம்

Published On 2018-02-16 14:43 GMT   |   Update On 2018-02-16 14:43 GMT
காவிரி விவகாரத்தில் இறுதித்தீர்ப்பு இன்று வெளியான நிலையில், தமிழகத்தில் நிலத்தை நனைக்க கேட்ட நீரில் நதி நனைய மட்டுமே கிடைத்திருக்கிறது என கவிஞர் வைரமுத்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். #CauveryVerdict
சென்னை:

காவிரி நதி நீரை பகிர்ந்துகொள்வது தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பினை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் முடிவடைந்து 150 நாட்களுக்குப் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்று கூறிய நீதிபதிகள், தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டனர். நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அதைவிட 14.75 டிஎம்சி குறைத்து தற்போது உத்தரவிட்டுள்ளனர். 

இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மட்டுமல்லாது, அரசியல் களம் காண உள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இது தொடர்பாக தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 

தீர்ப்பா? தீர்வா?

நிலம் நனையத் தண்ணீர் கேட்டோம்;
நதி நனைய மட்டுமே கிடைத்திருக்கிறது. 
தீர்ப்பை ஏற்றுக்கொள்வது ஒருபுறம்;
எதிர்கொள்வது மறுபுறம்.
என்ன செய்யப் போகிறோம்?

என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். #CauveryVerdict #Vairamuthu #TamilNews



Tags:    

Similar News