செய்திகள்

ஜெயலலிதாவின் கைரேகையை நானே நேரில் வாங்கினேன் - டாக்டர் பாலாஜி

Published On 2018-02-15 10:01 GMT   |   Update On 2018-02-15 10:01 GMT
அரசு மருத்துவர் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவின் கைரேகையை நான் பதிவு செய்தேன். அதற்கான அதிகாரம் எனக்கு இருக்கிறது என்று விசாரணை ஆணையத்தில் ஆஜரான டாக்டர் பாலாஜி கூறினார்.
சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஜெ. உறவினர்கள், சசிகலா உறவினர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா மருத்துவ மனையில் இருந்த போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

அப்போது அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான அங்கீகார படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்திற்கு பதிலாக அவரது கைரேகை பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த கைரேகை அரசு மருத்துவர் பாலாஜி முன்னிலையில் பெறப்பட்டது. ஜெயலலிதாவை தான் பார்த்ததாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் வேட்பாளர் அங்கீகாரக் கடிதத்தில் உள்ள ரேகை பதிவு ஜெயலலிதா உயிரோடு இருந்த போது பெறப்பட்டதல்ல என தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் சரவணன் குற்றம் சாட்டி இருந்தார். அதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு அரசு டாக்டர் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளித்தார்

நேற்று 3-வது நாளாக ஆணையத்தில் அவர் ஆஜரானார். ஜெயலலிதா கைரேகை பதிவு குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இதற்காக யாரிடம் இருந்தும் கடிதம் பெறப்படவில்லை. சுகாதாரத்துறை செயலாளர் வாய்மொழி உத்தரவுப்படி கைரேகையை பதிவு செய்தேன் என அவர் பதில் அளித்ததாக செய்தி வெளியானது.

இதையடுத்து இன்று மீண்டும் டாக்டர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி மனு ஒன்றை அளித்தார். அது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு மருத்துவர் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவின் கைரேகையை நான் பதிவு செய்தேன். அதற்கான அதிகாரம் எனக்கு இருக்கிறது. சுகாதார செயலாளர் வாய்மொழி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. அப்படி வெளிவந்த செய்தி தவறானவை. இதுபற்றி ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளேன். மேலும் அதை மறுத்து மனு கொடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் போயஸ் கார்டன் அலுவலக உதவியாளர் கார்த்திகேயனும் இன்று ஆஜராகி பதில் அளித்தார்.  #tamilnews
Tags:    

Similar News