செய்திகள்

தத்து எடுத்த பள்ளிக்கூடத்துக்கு 500 புத்தகங்கள் நன்கொடை: கனிமொழி எம்.பி. வழங்கினார்

Published On 2018-01-23 02:43 GMT   |   Update On 2018-01-23 02:43 GMT
பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை செலவழித்து பல்வேறு வசதிகளை செய்ய தத்து எடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை கனிமொழி எம்.பி. நன்கொடையாக வழங்கினார்.
சென்னை:

பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை செலவழித்து பல்வேறு வசதிகளை செய்ய தத்து எடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை கனிமொழி எம்.பி. நன்கொடையாக வழங்கினார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஏதாவது ஒரு கிராமத்தை தத்து எடுத்து, அவர்களுக்காக ஒதுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு வசதிகளை அளிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

கனிமொழி எம்.பி. உடனடியாக தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள ஸ்ரீவெங்கடேஷ்வரபுரம் கிராமத்தை தத்து எடுத்தார். கடந்த 3 ஆண்டுகளாக அந்த கிராமத்துக்கு தேவையான பல அடிப்படை வசதிகளை செய்தார். சில மாதங்களுக்கு முன்பு 68 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஒரு குளம் தூர்வாருவதற்கு பாராளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து இல்லாமல், தன் சொந்த பணத்தில் இருந்தும், பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டியும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்தார்.

ஆசீர்வாதபுரத்தில் உள்ள டி.டி.டி.ஏ. குருகால்பேரி மேல்நிலைப்பள்ளிக்கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை நன்கொடையாக அளித்தார்.

இந்த பள்ளிக்கூட ஆட்சிமன்ற உறுப்பினர் பி.ஸ்டாலின், உடற்கல்வி ஆசிரியர் ஏ.பொன்னையா சாமுவேல் ஆகியோர் இந்த புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.

நிச்சயமாக எனது பதவி காலத்தில் ஸ்ரீவெங்கடேஷ்வரபுரம் கிராமத்தை அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட ஒரு மாதிரி கிராமமாக உருவாக்கப் பாடுபடுவேன் என்று கனிமொழி எம்.பி. கூறினார். #tamilnews
Tags:    

Similar News