செய்திகள்

ஜெயலலிதாவின் சாவில் மர்மம்: வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-01-23 00:37 GMT   |   Update On 2018-01-23 00:37 GMT
ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. #Jayadeath #HighCourt
சென்னை:

ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வெளியிடவில்லை என்பதால், அவரது சாவில் மர்மம் உள்ளது என்றும், எனவே சந்தேகச் சாவு என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி எழும்பூர் 14-வது குற்றவியல் கோர்ட்டில் வக்கீல் ஏ.கே.வேலன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.



இந்த வழக்கை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி அவர் இறந்து விட்டதாக தமிழக அரசும், ஆஸ்பத்திரி நிர்வாகமும் அறிவித்தது.

ஆனால், 74 நாட்கள் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? என்ற விவரங்களை ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிடவில்லை. சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை சந்திக்க யாரையும் அனுமதிக்கவும் இல்லை. ஜெயலலிதாவை சந்திக்க சென்ற அப்போதைய தமிழக கவர்னருக்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை அவரது உடல் நலம் மற்றும் சிகிச்சை குறித்து விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டது.

மேலும், அவர் இறந்ததாக அறிவிப்பு வெளியிட்ட பின்னர், அவசர அவசரமாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை அவரது உறவினர் அல்லது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். அதை ஆஸ்பத்திரி நிர்வாகம் செய்யவில்லை. அதனால், ஜெயலலிதாவின் சாவில் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. எனவே, சந்தேகச்சாவு என்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த ஆயிரம் விளக்கு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், ‘ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையமும் விசாரணையை நடத்தி வருகிறது. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.  #Jayadeath #HighCourt #tamilnews
Tags:    

Similar News