செய்திகள்

நரசிம்மர் கோவில் தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2018-01-22 17:17 GMT   |   Update On 2018-01-22 17:17 GMT
நரசிம்மர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சரோஜா தொடங்கி வைத்தார்.

நாமக்கல்:

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலுக்கு ஆஞ்சநேயர், அரங்கநாதர், நரசிம்மர் தேர்கள் உள்ளன. ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இவற்றில் பெரிய தேரான நரசிம்மர் தேரானது ரூ.27 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த 6 மாதமாக அப்பணிகள் நடைபெற்று, இன்று தேர் வெள்ளோட்டம் கோட்டை சாலையில் நடைபெற்றது. 

இந்த தேர் வெள்ளோட்டத்தினை அமைச்சர் டாக்டர் சரோஜா வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தேருக்கு உற்சவர் எழுந்தருள சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. தேரானது, கோட்டை சாலை, ஆஞ்சநேயர் கோவில் சாலை வழியாக இழுத்து வரப்பட்டது. இதில், நாமக்கல் சுற்று வட்டார பக்தர்கள் திராளாகக் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

இதனையடுத்து ஆஞ்ச நேயர், அரங்கநாதர், நரசிம்மர் கோவில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையால் ரூ.17 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட கோவில் அலுவலகத்தை அமைச்சர் டாக்டர் சரோஜா திறந்து வைத்தார்.

முன்னதாக, நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர் கேட்டில் அமைந்துள்ள ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் சரோஜா பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் சி.மணிமேகலை, இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல இணை ஆணையர் த.வரதராஜன், தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஏ.எம்.வி.சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

Tags:    

Similar News