செய்திகள்
காட்பாடியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்த காட்சி.

வேலூரில் கவர்னர் ஆய்வு: தி.மு.க. கருப்புகொடி காட்டி எதிர்ப்பு

Published On 2018-01-22 05:28 GMT   |   Update On 2018-01-22 05:28 GMT
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் இன்று காலை மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார். #BanwarilalPurohit
வேலூர்:

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

அவர் தூய்மை பணிகளில் ஈடுபடுவதோடு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகிறார். அரசு அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நேற்று வேலூரில் நடந்த மாதா அமிர்தானந்தமயி நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். நேற்று இரவு வேலூர் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இன்று காலை காட்பாடி காந்தி நகரில் மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனையடுத்து வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பிடங்களையும், சுற்றுபுறங்களையும் ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்களிடம் துய்மை பாரதம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் பொதுமக்களை உறுதிமொழி எடுக்க செய்தார். கழிப்பிடங்களையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருப்போம். திறந்த வெளியில் மலம் கழிக்க மாட்டோம். கழிவறையைத் தான் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து வேலூர் பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

முன்னதாக காட்பாடி பகுதியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய இருப்பதாக அறிந்து தி.மு.க.வினர் விருதம்பட்டு குமரன் ஆஸ்பத்திரி அருகே திரண்டனர்.

வேலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் முகமதுசகி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் செய்தனர்.

கவர்னர் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கவர்னர் ஆய்வு செய்ய உள்ள இடங்களில் எல்லாம் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கவர்னர் தங்கி உள்ள விருந்தினர் மாளிகையிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் வழிநெடுகிலும் 100-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். #Tamilnews
Tags:    

Similar News