செய்திகள்

புதுவையில் இருந்து பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை

Published On 2018-01-12 12:11 GMT   |   Update On 2018-01-12 12:13 GMT
புதுவையில் இருந்து பெங்களூருக்கு பிப்ரவரி மாதம் 15-ந்தேதியில் இருந்து மீண்டும் பயணிகள் விமான சேவை தொடங்குகிறது.

புதுச்சேரி:

மத்திய அரசின் புதிய விமான கொள்கை உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான்வழியாக இணைக்க விமான நிறுவனங்களுக்கு பாதி கட்டணத்தை மத்திய அரசே ஏற்கும் என அறிவிப்பு வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து புதுவையில் இருந்து தடைபட்டிருந்த விமான சேவை மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புதுவை- ஐதராபாத் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூருக்கு ஸ்பைஸ் ஜெட் விமான சேவை தொடங்கப்பட்டு 2014-ம் ஆண்டு இடையில் நிறுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக மீண்டும் பெங்களூருக்கு பிப்ரவரி மாதம் 15-ந்தேதியில் இருந்து மீண்டும் பயணிகள் விமான சேவை தொடங்குகிறது.

78 இருக்கைகளை கொண்ட பம்பாரிடியர் விமானம் தினமும் காலை 9.30 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பி புதுவைக்கு 10.30 மணிக்கு வந்தடையும். பின்னர் 10.50 மணிக்கு புறப்பட்டு 12.10 மணிக்கு பெங்களூர் செல்லும்.

இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், பயண வழித்தடம், நேரம் திட்டமிட்டு வருகிறோம். பெங்களூரில் இருந்து டெல்லி, அகமதாபாத், மும்பை, புனே, திருவனந்தபுரம், கொச்சி இணைப்பு விமானம் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இதற்காக நிறைய திட்டமிட வேண்டியுள்ளது.

அதேபோல் மற்றொரு நிறுவனமான ஏர் ஒடிஷா நிறுவனம் சென்னை புதுவை சேலம் பெங்களூரு வழித்தடங்களில் விமானம் இயக்குவதற்கு விமான இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

நிறைய விமானங்கள் புதுவையில் இருந்து இயக்கப்படுவதால், விமான நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென விமான பணிகள் ஆணைய அதிகாரிகள் அரசிடம் கேட்டுள்ளனர்.

குறிப்பாக மெடிக்கல், ஏ.டி.எம். உள்ளிட்ட வசதிகள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அதே போல் பெரிய விமானங்கள் தரை இறங்கும் வகையில் விமான ஓடுபாதை விரிவாக்கத்துக்கு தமிழக அரசிடம் இது தொடர்பாக பல சுற்றுபேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக அரசிடமிருந்து 200 ஏக்கர் நிலம் கேட்டுள்ளோம். இதற்காக அறிக்கையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமர்ப்பித்துள்ளோம்.

இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு முதல்கட்டமாக 500 முதல் 600 மீட்டர் அளவுக்கு ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்படும். சர்வதேச விமானங்கள் தரை இறங்க 1500 மீட்டர் முதல் 2 ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு ஓடுபாதையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். #Puducheri #Bangalore #tamilnews

Tags:    

Similar News