செய்திகள்

ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி பேட்டி

Published On 2017-12-29 14:06 GMT   |   Update On 2017-12-29 14:06 GMT
ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க எனும் பேரியக்கத்தை அசைக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் பேட்டியளித்துள்ளார். #EdappadiPalaniswamy #TTVDhinakaran #ADMK #Rajinikanth #BJP
கோவை:

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார். சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “குறிப்பிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை தக்க வைக்கலாம்” என்று கூறினார்,

மேலும், ஓ.பன்னீர் செல்வமின் பெயரை குறிப்பிடாமல் “கட்சிக்கு களங்கம் விளைவித்தவர்களே, மற்றவர்களை களங்கம் விளைவித்ததாக நடவடிக்கை எடுக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். இவர்களின் ஆட்சி இன்னும் 3 மாதத்திற்கு மட்டுமே தொடரும்” என்றும் கூறினார்.

இந்நிலையில், கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

அ.தி.மு.க ஆட்சி மீது திட்டமிட்டு வீண்பழியை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சி செய்கின்றனர். ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க எனும் பேரியக்கத்தை அசைக்க முடியாது. பா.ஜ.க உடன் கூட்டணி என்று சிலர் கூறுவது கற்பனையான ஒன்று, அதற்கு பதில் சொல்ல முடியாது.

ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம், ரஜினி கட்சி தொடங்கினால் அதுபற்றி பேசலாம். குருமூர்த்தி தான் கூறிய வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார், தரக்குறைவான கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார். #EdappadiPalaniswamy #TTVDhinakaran #ADMK #Rajinikanth #BJP
Tags:    

Similar News