செய்திகள்

சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி ஜனவரி முதல் வாரத்தில் தொடங்குகிறது

Published On 2017-12-27 06:13 GMT   |   Update On 2017-12-27 06:13 GMT
சென்னை தீவுத்திடலில் அரசு தொழில் பொருட்காட்சியின் முகப்பு தோற்றம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் பொருட்காட்சி தொடக்க விழாவை நடத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை:

சென்னை தீவுத்திடலில் அரசு தொழில் பொருட்காட்சி ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி 45 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அரையாண்டு தேர்வு விடுமுறையுடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையும் இதில் சேர்ந்து வருவதால் டிசம்பர் இறுதியில் தொடங்கப்படும்.

அதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறை வருவதால் அரசு பொருட்காட்சியை காண சென்னையில் உள்ளவர்கள் மட்டுமின்றி புறநகர் பகுதியை சேர்ந்தவர்களும் வருவார்கள்.

ஆனால் கடந்த சில வருடமாக டிசம்பர் மாத இறுதியில் பொருட்காட்சி தொடங்க முடிவதில்லை. மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றத்தால் பொருட்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த வருடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பொருட்காட்சி முன் ஏற்பாடுகளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. ஒவ்வொரு பணிக்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இந்த மாத இறுதியில் பொருட்காட்சி தொடங்குவது தள்ளிப்போகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 24-ந்தேதியுடன் விலக்கி கொள்ளப்பட்டதால் அதனையடுத்து பொருட்காட்சி அமைப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி விட்டன. தீவுத்திடலில் அரங்குகள் அமைக்கும் பணியும், கடைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மத்திய, மாநில அரசுகளின் 20-க்கும் மேற்பட்ட துறைகளின் அரங்குகள், 100-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. சிறுவர்கள் பொழுது போக்கும் விதமாக ஓம்.சக்தி எண்டர்பிரைசஸ் சார்பில் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறு குழந்தைகளை மகிழ்வூட்டும் விளையாட்டு சாதனங்கள் நிறைய இடம் பெறுகின்றன.

குழந்தைகள் ரெயில் போக்குவரத்து ஒவ்வொரு ஆண்டும் முக்கிய அங்கம் வகிப்பது போல இந்த வருடமும் இயக்கப்படுகிறது.

அரசு தொழில் பொருட்காட்சியின் முகப்பு தோற்றம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. பெரும்பாலான அரங்குகள் அமைக்கும்பணி ஒரு சில நாட்களில் முடிந்து விடும். அதனால் ஜனவரி முதல் வாரத்தில் பொருட்காட்சி தொடக்க விழாவை நடத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் திட்டமிட்டுள்ளது.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் தலைமையில் தொடக்க விழா நடைபெறும் என்று தெரிகிறது.

பொருட்காட்சி நுழைவுக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு நிர்ணயம் செய்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. வாகனங்களின் பார்க்கிங் கட்டணத்தை முறைபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு கட்டணம் சுற்றுலா கழகம் நிர்ணயிக்காமல் டெண்டர் எடுத்தவர்கள் நிர்ணயித்து இஷ்டத்துக்கு வசூலிக்கிறார்கள். அதுபோன்று இந்த வருடம் இல்லாமல் வாகனங்களுக்கான கட்டணத்தை முறைப்படி தெரி விக்க வேண்டும்.

நுழைவு கட்டணத்தை விட வாகன கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதால் பொது மக்கள் பொருட்காட்சிக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். பார்க்கிங் கட்டணத்திற்கு சுற்றுலா கழகத்தினர் ‘சீல்’ போடப்பட்ட டோக்கன் வினியோகிக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் துண்டு சீட்டில் எழுதி வசூலிப்பதை தடுக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளை களைந்தால் பொருட்காட்சிக்கு மக்கள் அதிகளவு வருவார்கள். அதன் மூலம் வருவாய் அதிகரிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Tags:    

Similar News