செய்திகள்
கலெக்டர் அலுவலகம் அருகே ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி

ஒக்கி புயலால் மீனவர்கள் பாதிப்பு: ராமதாஸ், அன்புமணி போராட்டம்

Published On 2017-12-16 08:26 GMT   |   Update On 2017-12-16 08:26 GMT
ஒக்கி புயலில் சிக்கி பலியான மீனவர்களை காப்பாற்ற தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை:

ஒக்கி புயலில் சிக்கி பலியான மீனவர்களை காப்பாற்ற தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னையில் இன்று பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி மாநில அமைப்பாளர் மு.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வட சென்னை மாவட்ட தலைவர் வெங்கடேச பெருமாள், மாநில துணை தலைவர் கே.என்.சேகர், மீனவர் சங்க பிரதிநிதிகள் எம்.இ.ராஜா, தயாளன், கோ.சு.மணி, நாஞ்சில் ரவி, பாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

‘‘ஒக்கி புயலில் சிக்கி தவித்த கன்னியாகுமரி மீனவர்களை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் புயலில் சிக்கி பலியாகி விட்டனர். அவர்களின் உடல் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளது.



மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பலியான மீனவர்களை காப்பாற்றி இருக்கலாம். இப்புயலின் போது மத்திய, மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துவிட்டன.

புயலில் சிக்கி பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பலியான மீனவர்களின் உயிருக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் இனி இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News