செய்திகள்

மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2017-12-16 05:22 GMT   |   Update On 2017-12-16 05:22 GMT
மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை வெட்டிச்சாய்த்த கும்பலை பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாடிப்பட்டி:

மதுரை கரிமேட்டை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் அமரேஷ் என்ற அமர் (வயது22). இவர் நேற்று மதியம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து மதுரைக்கு பஸ்சில் புறப்பட்டார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனிச்சியம் பிரிவு அருகே பஸ் வந்த போது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வழிமறித்தது.

அந்த கும்பல் பஸ்சுக்குள் ஏறி கடைசி இருக்கையில் இருந்த அமரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. பலத்த வெட்டு காயம் அடைந்த அமர், பஸ்சுக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அதன் பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சுக்குள் நடந்த கொலை சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. போலீசார் விரைந்து சென்று அமர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் அமருக்கு பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு மதுரையில் ராம்பிரசாத் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கும் இவர் மீது உள்ளது. இந்த கொலைக்கு பழிக்கு பழியாகத்தான் தற்போது அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர்.

கொலையாளிகளை பிடிக்க சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ் (அலங்காநல்லூர்), முத்து (நாகமலை புதுக்கோட்டை), முத்துப்பாண்டி (சமயநல்லூர்) ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படையினர் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

2011-ல் கொலையான ராம்பிரசாத்தின் உறவினர் பிரகாஷ் தலைமையில் தான் 10 பேர் கும்பல் திட்டமிட்டு, அமரை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News