செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் நிவாரண பணிகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்: கவர்னர் புரோகித் கோரிக்கை

Published On 2017-12-13 01:02 GMT   |   Update On 2017-12-13 01:02 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் புயல் நிவாரண பணிகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரிகளுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோரிக்கை விடுத்தார்.
சென்னை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் புயல் நிவாரண பணிகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரிகளுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நீர்வளம் மற்றும் ஆறுகள் மேம்பாட்டுத் துறை மந்திரி நிதின் கட்காரியை அவரது இல்லத்திற்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று சந்தித்து பேசினார்.



அப்போது, தமிழ்நாட்டின் நீராதாரத்தை அதிகரிக்கும் வகையில் தீபகற்ப நதிகள் இணைப்பை துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் குடிநீர் தேவை குறித்து மத்திய மந்திரியிடம் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

இதுபற்றி பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி, உபயோகிக்கப்படாத உபரி நீரை தமிழகத்துக்கு திருப்பி, மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும், தமிழகத்தில் ஒருவர்கூட குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உறுதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார்.

7-ந்தேதியன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து திரட்டியிருந்த புயல் பாதிப்பு தகவல்களை மத்திய மந்திரிகளுடன் பகிர்ந்தார். மேலும், புயல் நிவாரண பணிகளுக்கான நிதி உதவியை வழங்கும்படி அவர்களிடம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோரிக்கை விடுத்தார்.

11-ந்தேதியன்று அங்கு நடந்த கவர்னர்கள் குழு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் ஆந்திரா மற்றும் தெலுங்கானா கவர்னர் நரசிம்மன், உத்திரபிரதேச கவர்னர் ராம்நாயக், திரிபுரா கவர்னர் தாதகட்டா ராய், இமாச்சல பிரதேச கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோருடன் சென்று ஜனாதிபதியை சந்தித்தார். அங்கு கவர்னர்கள் குழு கூட்டம் பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News