செய்திகள்

கன்னியாகுமரி: 12 மணிநேரத்திற்கு மேலாக நடந்த தமிழக மீனவர்கள் போராட்டம் வாபஸ்

Published On 2017-12-07 19:00 GMT   |   Update On 2017-12-07 19:01 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தின் குழித்துறை ரெயில் நிலையத்தில் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழக மீனவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
குழித்துறை:

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் வீசியபோது கடலுக்கு சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சூறாவளியில் சிக்கி மாயமாகி விட்டனர். குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களின் படகுகளும் மாயமாகி விட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்றவர்களில் ஒக்கி புயலில் சிக்கி 254 படகுகள் கரை திரும்பவில்லை. இதில் மீன்பிடிக்கச் சென்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் மீனவ அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.



மாயமான மீனவர்களை இந்திய கடற்படை, கடலோர காவல்படை வீரர்கள் தேடி வந்தனர். இதில் மராட்டியம், கோவா, குஜராத், கேரள மற்றும் லட்சத்தீவுகளில் குமரி மீனவர்களின் படகுகள் கரை ஒதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அண்டை மாநிலமான கேரளாவில் ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணியும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

பலியான மீனவர் குடும்பத்திற்கு கேரள அரசு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்குகிறது. இதுபோல தமிழக அரசும் நிவாரண நிதி வழங்க வேண்டும், மாயமான மீனவர்களை தேடும் பணியை முடுக்கி விட வேண்டுமென்று மீனவ அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி இன்று குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி ஆகிய 8 மீனவ கிராம மக்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அவர்கள் இன்று சின்னத்துறையில் இருந்து மார்த்தாண்டத்தை அடுத்த குழித்துறை நோக்கி நடை பயணம் தொடங்கினர். நித்திரவிளை, நடைகாவு, புதுக்கடை வழியாக குழித்துறை சென்று அங்கு ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அப்பகுதி வழியாக செல்லவேண்டிய ரெயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. போராட்டத்தினால் சென்னையில் இருந்து குருவாயூர் சென்று கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த 12 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற தமிழக மீனவர்களின் ரெயில் மறியல் போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. மீனவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடுத்த தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதையடுத்து கன்னியாகுமரி மண்டல பங்குத்தந்தை கேட்டுக்கொண்டதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து சுமார் 12 மணிநேரத்திற்கும் மேலாக தடைபட்டிருந்த ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
Tags:    

Similar News