செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடிநாள் வாழ்த்து: நன்கொடை வாரி வழங்க கோரிக்கை

Published On 2017-12-06 06:44 GMT   |   Update On 2017-12-06 06:44 GMT
முப்படை வீரர்களின் மகத்தான சேவையினை நினைவு கூறும் கொடி நாளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி “கொடி நாள்” வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

முப்படை வீரர்களின் மகத்தான சேவையினை நினைவு கூறும் வகையில் முப்படையினர் கொடி நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

நாட்டிற்கு சேவை செய்ய இளம் ஆண்கள் மற்றும் பெண்களை இந்திய ராணுவப் படைக்கு அனுப்பி வைக்கும் உன்னதமான மரபை தமிழ்நாடு கொண்டுள்ளது. நமது இளஞ்சிறார்கள் மத்தியில் வீரத்தை விதைத்து, படைப்பணியில் அலுவலர்களாக சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்.

இப்படை வீரர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கு ஏதுவாக, அவர்கள் குடும்பத்தினருடன் இல்லாதபோதும் அவர்களுடைய குடும்பங்களை காப்பதும், தங்களது ஓய்வு காலத்தை அமைதியாகவும், ஆக்கபூர்வமாகவும் கழிப்பதற்கு வழிவகை செய்வதும் இன்றியமையாததாகும்.

போரில் மரணமடைந்த படைவீரர்களின் வாரிசுதாரர்கள், போர் கைம் பெண்கள், போரில் ஊனமுற்றோர் மற்றும் கொடிய நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு உதவி செய்வதும், ராணுவத்தில் பணியாற்றி படைப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மறுவேலைவாய்ப்பு அளிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியதும் நம் அனைவரின் கடமை. இப்பணிகளை மேற்கொள்ள தமிழ் மக்களாகிய நம் அனைவரின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்.

முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்ற படைவீரர்கள், போர் விதவைகள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்காக தமிழ்நாடு அரசின் முன்னாள் படை வீரர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்காகவே கொடி நாளில் திரட்டப்படும் நன்கொடைகள் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் கொடி நாள் வசூல் இலக்கினை மிஞ்சி தமிழ்நாட்டு மக்கள் ஈகையில் சிறந்தவர்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.

அகில இந்திய அளவில் மக்கள் தொகை அடிப்படையில் கொடி நாள் நிதி வசூலில் நமது மாநிலம் 13 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வுயரிய நோக்கத்திற்காக தொடர்ந்து நிதி அளிக்கும் தமிழ் மக்களின் ஈகை குணத்திற்கு வழங்கப்பட்ட நற்சான்றாகும். எனவே, இவ்வாண்டும் படைவீரர் கொடி நாள் நிதிக்கு நன்கொடையினை வாரி வழங்கி முன்னாள் படைவீரர்கள் நலம் காப்போம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Tags:    

Similar News