செய்திகள்

மலை ரெயில் பாதையில் மீண்டும் மண் சரிவு: மலை ரெயில் 4-வது நாளாக ரத்து

Published On 2017-12-05 04:04 GMT   |   Update On 2017-12-05 04:04 GMT
மலை ரெயில் பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் போக்குவரத்து 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. சாலைகளில் பாறைகளும் உருண்டு விழுந்தது. இதனை பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் அகற்றினார்கள்.

ஊட்டி மலை ரெயில் பாதையில் கடந்த 2-ந்தேதி அடர்லி - ஹில்குரோ பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. பாறைகளும் உருண்டு விழுந்தது. ரெயில்வே ஊழியர்கள் இதனை சரி செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் அடர்லி-கில்குரோ மலை ரெயில் பாதையில் மீண்டும் மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்தது. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பாறைகளை வெடிவைத்து தகர்த்து அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

ஊட்டியில் தற்போது மழை இல்லை. நேற்று இரவு மிதமான மழை மட்டும் பெய்தது.

பாறைகள் மலை ரெயில் பாதையில் விழுந்து கிடப்பதால் மலை ரெயில் போக்குவரத்து இன்று 4- வது நாளாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் குன்னூர்- ஊட்டி இடையே மலை ரெயில் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News