செய்திகள்

தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 10 கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம்

Published On 2017-12-04 05:07 GMT   |   Update On 2017-12-04 05:07 GMT
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள 10 கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார்கள்.
சென்னை:

தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-ந்தேதி நடக்கிறது.

இந்த கூட்டத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள 10 கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பேசுகிறார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில செயலாளர் கதிரவன் உள்பட 10 தலைவர்கள் பேசுகிறார்கள்

அவர்களுக்கு தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தி.மு.க. மேடையில் ஏறாமல் தனியாக பிரசாரம் செய்ய உள்ளதாக அந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் ஜி.ராமகிருஷ்ணனையும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டத்திற்கு பிறகு ஒவ்வொரு நாளும் வேட்பாளர் மருது கணேசுடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்க உள்ளனர். இதற்கான சுற்றுப்பயண விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் களம் இறங்குவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Tags:    

Similar News