செய்திகள்

40 ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைப்பணி இம்மாதத்துடன் நிறைவு: அதிகாரிகள் தகவல்

Published On 2017-11-19 20:34 GMT   |   Update On 2017-11-19 20:34 GMT
சென்னையில் 40 ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதைப்பணி இம்மாத இறுதியில் நிறைவு பெறும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.
சென்னை:

சென்னையில் 40 ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதைப்பணி இம்மாத இறுதியில் நிறைவு பெறும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கான பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சுரங்கப்பாதை மற்றும் பறக்கும் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை- சைதாப்பேட்டை இடையே 14.3 கிலோ மீட்டர் தூரமும், 2-வது வழித்தடத்தில் சென்டிரலில் இருந்து திருமங்கலம் வரை 9.7 கிலோ மீட்டர் தூரத்துக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 99 சதவீதம் சுரங்கம்தோண்டும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. கடைசியாக மேதின பூங்கா- தேனாம்பேட்டை (ஏ.ஜி-டி.எம்.எஸ்.) இடையே நடந்து வரும் 2 பணிகளில் ஒரு பணி மட்டும் நிறைவடைய வேண்டி உள்ளது. அந்தப்பணியும் இம்மாத இறுதியில் நிறைவடைய உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் வண்ணாரப்பேட்டை- எழும்பூர் (4,445 மீட்டர்) 2 வழித்தடம், மேதின பூங்கா- சென்டிரல் (2,080 மீட்டர்), மேதின பூங்கா- தேனாம்பேட்டை (ஏ.ஜி-டி.எம்.எஸ்.) (3,616 மீட்டர்) 2 வழித்தடம், சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை (ஏ.ஜி-டி.எம்.எஸ்.) (5,736 மீட்டர்), எழும்பூர்- ஷெனாய்நகர் (6,776 மீட்டர்). ஷெனாய்நகர்- திருமங்கலம் (5,594 மீட்டர்), வண்ணாரப்பேட்டை- கொருக்குப்பேட்டை (2 ஆயிரம் மீட்டர்) 2 வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 40 ஆயிரத்து 308 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாதைக்கான பணிகள் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டன. இதற்காக ரஷியா, சீனா நாடுகளில் இருந்து 11 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் (டனல் போரிங் மிஷின்) கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்தன.

சுரங்கம் தோண்டும் பணிகளுடன், சுரங்கத்தில் ரெயில் நிலையங்கள் கட்டுமானப் பணியும் நடந்தது. அந்தவகையில் முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, ஐகோர்ட்டு, சென்டிரல், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., ஆயிரம்விளக்கு, ஏ.ஜி-டி.எம்.எஸ்., தேனாம்பேட்டை, மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 10 இடங்களில் சுரங்க ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 2-வது வழித்தடத்தில் எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய்நகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம் ஆகிய 8 ரெயில் நிலையங்கள் உள்பட 18 சுரங்க ரெயில் நிலையங்களில் ஒரு சில ரெயில் நிலையங்கள் தவிர மீதம் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களுக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து உள்ளன.

தற்போது சுரங்கம் தோண்டும் பணியில் மே தின பூங்கா- தேனாம்பேட்டை ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையே 2-வது பாதைக்கான பணி தவிர மற்ற அனைத்து சுரங்கம் தோண்டும் பணிகளும் நிறைவடைந்தன. இந்தப்பாதையும் இம்மாத இறுதி அல்லது டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறைவடைய உள்ளது. சுரங்கம் அமைக்கும் பணியில் சென்டிரல்- ஓமந்தூரார் அரசினர் தோட்டம் இடையே கூவம் ஆற்றுக்கு அடியில் பாதை அமைத்துள்ளது.

அதேபோன்று சைதாப்பேட்டை- எல்.ஐ.சி. இடையே அண்ணாசாலையில் இருபுறமும் பெரிய கட்டிடங்கள் இடையே சுரங்கம் தோண்டும் பணியும் சவாலாக இருந்துள்ளது. அத்துடன் கடற்கரையில் சென்னை மாநகரம் இருப்பதால் சுரங்கம் தோண்டும் பணியில் பெரும்பகுதி கடல் மண்ணும், களிமண்ணும், பாறைகளும் இருந்தது. இந்தப்பணியை தொடர்ந்து அண்ணாசாலையில் சுரங்கம் தோண்டிய பகுதியில் விரைவில் ரெயில் தண்டவாளம் மற்றும் சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 
Tags:    

Similar News