செய்திகள்

தஞ்சையில் இன்று சரபோஜி கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

Published On 2017-11-17 13:43 GMT   |   Update On 2017-11-17 13:43 GMT
தஞ்சையில் இன்று சரபோஜி கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்:

தஞ்சையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்,

இதையொட்டி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் மேடை அமைப்பு, மற்றும் அலங்கார வளைவுகள் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் விழாவையொட்டி கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு மன்னர் சரபோஜி கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இன்று காலை விளையாட்டு மைதானத்தில் கிராவல் மண் போடப்பட்டு சமன்படுத்தும் பணி நடந்தது. இதை கண்டு கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கல்லூரி முன்பு திரண்டு ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மருத்துவக் கல்லூரி போலீசார் விரைந்து வந்து மறியல் செய்த மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுபற்றி மாணவர்கள் கூறும் போது, ‘‘ இந்த விளையாட்டு மைதானத்தை நடை பயிற்சி செல்பவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் மாணவர்கள் பயன்படுத்தி வருகிறோம். தற்போது இங்கு கிராவல் மண்ணை போட்டு மைதானத்தை நாசமாக்கி வருகிறார்கள். இதை கண்டித்து தான் மறியல் போராட்டம் நடத்தினோம்’ என்றனர்.

மாணவர்களின் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News