செய்திகள்

கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-11-15 07:45 GMT   |   Update On 2017-11-15 07:45 GMT
கந்துவட்டி கொடுமையை சித்தரித்து கார்ட்டூன் வரைந்த பாலா மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

சென்னையை சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலமுருகன் என்ற பாலா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த அக்டோபர் 23-ந்தேதி திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கந்து வட்டி கொடுமையால் இசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளித்து பலியானார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அக்டோபர் 24-ந் தேதி ஒரு கார்ட்டூன் வரைந்து என்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். அதில் முதல்வர், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அரை நிர்வாண கோலத்தில் நின்று தீக்குளிப்பு சம்பவத்தை பார்ப்பது போல் சித்தரித்திருந்தேன்.

இந்த நிலையில் நெல்லை கலெக்டர் அளித்த புகாரின் பேரில் என் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன்படி வழக்குப் பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி சென்னைக்கு வந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் என்னை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்தார்.


இந்த வழக்கின்படி நான் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. என்னை கைது செய்தது இயற்கை நீதிக்கு முரணானது. ஆகவே, என் மீது காவல்துறையினர் பதிந்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், நெல்லை மாநகர காவல் துறையினர், கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News