செய்திகள்

அமெரிக்கா சென்று படிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2017-11-14 01:42 GMT   |   Update On 2017-11-14 01:42 GMT
இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று படிக்கும் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதர் ராபர்ட் ஜி பர்கஸ் தெரிவித்தார்.
சென்னை:

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக துணைத்தூதர் ராபர்ட் ஜி பர்கஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமெரிக்காவில் நியூயார்க் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் உள்பட 20 பல்கலைக்கழகங்கள் முக்கிய பல்கலைக்கழகங்களாக விளங்குகின்றன.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவ-மாணவிகளில் அதிகம் பேர் இளநிலை பட்டபடிப்பு படிப்பவர்கள்தான். 2016-2017 கல்வி ஆண்டில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் 56.3 சதவீதம். பட்டப்படிப்பு முடித்து விட்டு முதுநிலை பட்டம் உள்ளிட்ட இதர படிப்பு படிப்பவர்கள் 1.2 சதவீதம் ஆகும். பட்டப்படிப்புக்கு கீழே படிப்பவர்கள் 11.8 சதவீதம் பேர். வேலைவாய்ப்புக்கு தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறுபவர்கள் 30.7 சதவீதம் பேர்கள்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 267 பேர் இந்த ஆண்டு (2016-17) படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இது 2015-2016-ம் ஆண்டைவிட 12.3 சதவீதம் அதிகம்.



அமெரிக்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 லட்சத்து 43 ஆயிரத்து 839 பேர் படிக்கிறார்கள். இவர்களில் முதல் இடம் பிடிக்கும் சீனாவில் இருந்து மட்டும் 3 லட்சத்து 28 ஆயிரத்து 547 பேர் படிக்கிறார்கள். இதில் இந்தியா 2-வது இடம் பிடிக்கிறது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தரமான கல்வி அளிப்பதால் வருடந்தோறும் உலக நாடுகளில் இருந்து மாணவ-மாணவிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இது வருடத்திற்கு வருடம் அதிகரிக்கிறது. இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்காக பல்வேறு தொழிற்சாலைகளில் பயிற்சி பெறுகிறார்கள். அவ்வாறு 2016-2017-ம் ஆண்டு 57 ஆயிரத்து 132 பேர் பயிற்சி பெறுகிறார்கள்.

கல்வி உதவித்தொகை ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் வேறுபடுகிறது. மாணவர்களை தேர்ந்து எடுக்கும் முன்பே பல்கலைக்கழகங்கள் தங்களது இணையதளத்தில் கல்வி உதவித்தொகை குறித்து விளக்கமாக வெளியிடுகிறார்கள். அதன்படி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் படிக்கும் மாணவ-மாணவிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அமெரிக்க துணைத்தூதர் ராபர்ட் ஜி பர்கஸ் கூறினார். 
Tags:    

Similar News