செய்திகள்

கருணாநிதியை, மோடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2017-11-07 07:04 GMT   |   Update On 2017-11-07 07:04 GMT
கருணாநிதியை, பிரதமர் மோடி சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. இது உருக்கமான நிகழ்வு என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
குழித்துறை:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று குழித்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக அரசு மழை வெள்ளப்பாதிப்புக்காக மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்டுள்ளது. பிரதமர் மோடி அது தினசரி நிகழ்வாக இருக்கக் கூடாது. நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும். எத்தனை மழை வெள்ளம் வந்தாலும் மக்களை பாதிக்காத வகையில் திட்டம் வகுத்து கூறுங்கள். அதற்கு தேவையான நிதியை தர தயாராக இருக்கிறோம் என்று கூறி உள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு தினத்தை துக்கத் தினமாக கடைபிடிக்கப்போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன. இது கறுப்பு பணம் மற்றும் கொள்ளையடித்த பணத்தை பதுக்கிவைத்திருந்தவர்களுக்கு தான் துக்கத்தினம்.

நேர்மையாக உழைத்தவர்களுக்கு மகிழ்ச்சி தினம் தான். நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு போட்டிருப்பது, கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டிருப்பதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் கிடையாது. அது மாநில அரசுகள் சம்பந்தப்பட்டது.

கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கினால் அதனை நான் வரவேற்கிறேன். அதனால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.


5 முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்தவர் மூத்த அரசியல் வாதி என்ற அடிப்படையில் கருணாநிதியை அவரது உடல் நலம் கருதி பிரதமர் மோடி பார்த்துள்ளார். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. இது உருக்கமான நிகழ்வு. இதற்கு முன்பு மு.க.ஸ்டாலினை மோடி சந்திக்காததற்கு பல அரசியல் காரணங்கள் உள்ளது.

களியக்காவிளை மத்தம்பாலையத்தில் நிதி நிறுவன மோசடியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நான் நேரில் சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தேன். இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடமும் நான் பேசி உள்ளேன். நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்கள் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள். அதனை மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். குமரி மாவட்டத்தில் இனையம் துறைமுகம், சாமிதோப்பில் விமான நிலையம் நிச்சயம் வந்தே தீரும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக குழித்துறை மகாதேவர் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் ஆடி அமாவாசையன்று பலிகர்ம பூஜை செய்வதற்காக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் படித்துறை ரூ.25 லட்சம் செலவில் கட்டுவதற்கான அடிக்கல்லை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாட்டினார். இதற்கான நிதி அவரது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News