செய்திகள்

குழந்தைகள் உயிரிழப்பிற்கு மின்வாரிய ஊழியர்களே காரணம்: பெற்றோர்கள் கதறல்

Published On 2017-11-02 08:23 GMT   |   Update On 2017-11-02 08:23 GMT
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி பலியான குழந்தைகள் உயிரிழப்பிற்கு மின்வாரிய ஊழியர்களே காரணம் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் கூறினர்.
பெரம்பூர்:

கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர், ராஜரத்தினம் நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ‘பி’ பிளாக்கில் வசித்து வருபவர் பார்த்திபன். இவரது மனைவி அனு. இவர்களுடைய மகள் பாவனா (7). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

அதே அடுக்குமாடி குடியிருப்பு ‘டி’ பிளாக்கை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி மோகனா. இவர்களுடைய மகள் யுவஸ்ரீ (9). இவளும் அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையில் அந்த பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கி இருந்தது. நேற்று மதியம் சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ ஆகியோர் பக்கத்து தெருவில் உள்ள டிபன் கடைக்கு சென்றனர்.

அப்போது ராஜரத்தினம் தெருவில் மின்சார பெட்டியில் இருந்து புதைக்கப்படாமல் சென்ற மின் வயரில் மின்கசிவு ஏற்பட்டு தேங்கி இருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது.

இதனை அறியாமல் மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் சிறுமிகள் இருவரும் இறங்கினர். இதில் மின்சாரம் தாக்கி பாவனாவும், யுவஸ்ரீயும் பரிதாபமாக இறந்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மின்வாரிய அதிகாரிகளின் மெத்தனத்தால் உயிர்பலி ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலிலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி வியாசர்பாடி செயற்பொறியாளர் குமரேசன், உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் டெல்லி மற்றும் அப்பகுதி களப்பணியாளர்கள் 5 பேர் உள்பட மொத்தம் 8 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பலியான 2 சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் ஜெயக்குமார் பலியான சிறுமிகளின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் சிறுமிகளின் பெற்றோர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

இது குறித்து பலியான பாவனாவின் தாய் அனு கண்ணீர் மல்க கூறியதாவது:-

நான் மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனது கணவர் கூலி தொழிலாளியாக உள்ளார். நாங்கள் பாவனாவை கஷ்டப்பட்டு படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று நினைத்தோம்.

நேற்று மதியம் பாவனாவை அருகில் உள்ள கடையில் டிபன் வாங்கி சாப்பிடுமாறு கூறி இருந்தேன். அவள் யுவஸ்ரீயை அழைத்து கொண்டு கடைக்கு சென்ற போது மின்சாரம் பாய்ந்த மழை நீரில் சிக்கி பலியாகிவிட்டாள்.

இதற்கு மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம். இதே போல் உயிருக்கு ஆபத்தான மின்வாரிய பெட்டிகள் சாலையோரத்தில் உள்ளன.

மீண்டும் உயிர் பலி கேட்கும்முன் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பலியான யுவஸ்ரீயின் தாய் மோகனா கூறும்போது:-

கணவர் மண்ணடியில் ரிக்‌ஷா  ஓட்டி வருகிறார். நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். மகள் யுவஸ்ரீ மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக எனக்கு தகவல் வந்ததும் நான் உடைந்து போய்விட்டேன்.

மகளை இழந்ததற்கு முழு பொறுப்பையும் மின்வாரிய அதிகாரிகள் ஏற்க வேண்டும். இதற்கு காரணமான ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் தண்ணீர் தேங்குவதாகவும், மின்சாதன பெட்டி அபாயம் குறித்து பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்போது 2 உயிர்கள் பலியாகி விட்டன. அதனை திருப்பி கொடுக்க முடியுமா?

இவ்வாறு அவர் கூறினார்.

பலியான சிறுமிகளின் உடல்களுக்கு வெங்கடேஷ் பாபு எம்.பி., சமத்துவ மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் சேவியர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

துணை கமி‌ஷனர் சியாமளா தேவி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News