செய்திகள்

வார்த்தைகளை நிதானமின்றி பேசுவதை தவிர்ப்பது நல்லது: தமிழிசைக்கு கி.வீரமணி யோசனை

Published On 2017-10-27 03:21 GMT   |   Update On 2017-10-27 03:22 GMT
தமிழிசை சவுந்தரராஜன் அவசரத்தில் வார்த்தைகளை நிதானமின்றிப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி யோசனை கூறி உள்ளார்.
சென்னை:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தான் இருக்கும் கட்சிக்கு ஏற்ப மதவாத அரசியல் கண்ணோட்டத்தில் அவ்வப்போது கருத்துகளை சொல்லி வருகிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மேல் சாதி ஆதிக்க மதவாத கட்சியில் தம்மை உட்படுத்திக் கொண்டதால், இடத்துக்கு ஏற்ப அவர் தெரிவித்துவரும் கருத்துகள் எதிர் விளைவைத்தான் தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் என்றாலும், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆபாசமாகவும், கொச்சைத்தனமாகவும் பதிவு செய்வது உகந்தது அல்ல.

பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட தலைவர் பெரியார் பிறந்த மண்ணில், பெண்களை இழிவுபடுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. பொது வாழ்விற்குப் பெண்கள் வந்தால் இந்த நிலைதான் என்ற நிலை உருவாகிவிடக் கூடாது அல்லவா?. டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற முறையில் அவசரத்தில் வார்த்தைகளை நிதானமின்றிப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags:    

Similar News