செய்திகள்
குமரி அனந்தனை ஸ்டிரெச்சரில் படுக்க வைத்து ஆம்புலன்ஸ் வேனில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற காட்சி

பாப்பாராப்பட்டியில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற குமரி அனந்தன் கைது

Published On 2017-10-24 05:36 GMT   |   Update On 2017-10-24 05:36 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பாராப்பட்டியில் பாரத மாதா கோவில் கட்ட கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனை போலீசார் கைது செய்தனர்.
பாப்பாரப்பட்டி:

நதிகளை இணைக்க வேண்டும், மது விலக்கை அமுல்படுத்த வேண்டும், சுப்பிரமணியசிவாவின் எண்ணப்படி பாப்பாராப்பட்டியில் பாரத மாதா கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கடந்த 2-ந்தேதி சென்னையில் இருந்து பாப்பாரப்பட்டி வரை நடைபயணத்தை தொடங்கினார்.

நேற்று அவர் பாப்பாரப்பட்டி அருகே உள்ள திருமல்வாடிக்கு வந்தார். அப்போது அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பாரத மாதா கோவில் கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பிக்காவிட்டால் இன்று காலை முதல் பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் அறிவித்தார்.

அதன்படி பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோவில் கட்ட வலியுறுத்தி இன்று காலை சுப்பிரமணியசிவா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர் அந்த பகுதியில் உண்ணாவிரதம் இருக்க தயாரானார்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ் டி.எஸ்.பி. அன்புராஜ் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி சங்கர் மற்றும் அதிகாரிகள் உண்ணாவிரதம் இருக்க உங்களுக்கு அனுமதி இல்லை என்று குமரி அனந்தனிடம் கூறினர். மேலும் பாரத மாதா கோவில் கட்ட வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை அரசுக்கு எடுத்துரைக்கிறோம் என்றும் கூறினர்.

அப்போது அடிக்கல் நாட்டி 94 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பாரத மாதா கோவில் கட்டப்படவில்லை. பாரத மாதா கோவில் கட்ட வேண்டி 6 முறை நடை பயணம் மேற்கொண்டுள்ளேன். எனது கோரிக்கையை ஏற்று அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா பாரத மாதா கோவில் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.


2015-ம் ஆண்டு நான் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பாரத மாதா கோவில் கட்ட தமிழக அரசுக்கு உத்தரவிட்டடது. 2 ஆண்டுகள் ஆகியும் நீதிமன்ற தீர்ப்பு அமுல்படுத்தவில்லை. எனவே பாரத மாதா கோவில் கட்டும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறினார். இதையடுத்து உடல் நிலையை சோதனை செய்ய வேண்டும் என்று தயாராக நின்ற மருத்துவ குழுவினர் கூறினர்.

இதற்கிடையே கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் உடல் நலன் கருதி குமரி ஆனந்தனை கைது செய்வதாக கூறி ஸ்டெச்சரில் தூக்கி வைத்து ஆம்புலன்சில் ஏற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News