செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை: மின்னல் தாக்கி இளம்பெண் பலி

Published On 2017-10-22 11:22 GMT   |   Update On 2017-10-22 11:22 GMT
டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. திருவாரூரில் மின்னல் தாக்கி இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி:

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று மாலை இரவு வரை மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கும்பகோணம், பாபநாசம், பூதலூர், பட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

தற்போது சம்பா நடவு பணி நடந்து வருகிறது. மழையும் மிதமாக பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

குறிப்பாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் இடி- மின்னலுடன் மழை பெய்தது.

மன்னார்குடி அருகே துண்டகட்டளை என்ற கிராமத்தில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பவரின் மனைவி உமாராணி (வயது 32) என்ற பெண் வயலில் நடவு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் உமாராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அங்கு நின்ற வாசுகி (50) என்ற பெண் படுகாயம் அடைந்தார். அவர் தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மின்னல் தாக்கி பலியான உமாராணிக்கு ஆதித்யா (10) ஆர்யா (8) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

இதேபோல் திருத்துறைப்பூண்டி அருகே ஆண்டாங் கரை பகுதியில் நேற்று மாலை 15-க்கும் மேற்பட்ட பெண்கள் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது சின்னகாளி என்பவரின் மனைவி சின்னபொண்ணு (60) என்ப வரை மின்னல் தாக்கியது. இதில் அவர் உடல் கருகி படுகாயம் அடைந்தார். அவரை திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் சின்ன பொண்ணு அருகில் நின்ற ஜெயம், மங்கையற்கரசி, வேத நாயகி, கமலி ஆகிய 4 பெண்களையும் மின்னல் தாக்கியதில் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்களையும் மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர்கள் 4 பேரும் சிறிதுநேரத்தில் கண் விழித்து இயல்பு நிலைக்கு திரும்பினர்.

நாகை மாவட்டத்திலும் பரவலாக பல இடங்களில் நேற்று மழை பெய்தது.

குறிப்பாக வேதாரண்யம், ஆறுக்காட்டு துறை, கோடியக்கரை ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. இதனால் நேற்று மாலை மீனவர்கள் சுமார் 1500 பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Tags:    

Similar News