செய்திகள்

குமரி மாவட்ட மலையோர பகுதியில் மழை நீடிப்பு: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Published On 2017-10-16 10:35 GMT   |   Update On 2017-10-16 10:35 GMT
குமரி மாவட்டத்தில் நேற்று மலையோர பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று மலையோர பகுதிகளில் மழை பெய்தது. இதையொட்டி அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியிலும் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையான நேற்று திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 534 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 20.15 அடியாக உள்ளது. பாசனத்திற்காக அணையில் இருந்து 604 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 48.85 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 376 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 248 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் சிற்றாறு-1 அணைக்கு 50 கனஅடி தண்ணீரும், சிற்றாறு-2 அணைக்கு 10 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறை அணைக்கு 2 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை பகுதியில் 3.2 மில்லி மீட்டர் மழையும், சிற்றாறு-1 அணை பகுதியில் 7.4 மில்லி மீட்டரும், சிற்றாறு-ல் 2 மில்லி மீட்டரும் பதிவாகி உள்ளது. மேலும் முள்ளங்கினாவிளையில் 5 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. இன்று காலை மலையோர பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.
Tags:    

Similar News